கோலம் போடுவது ஏன்?

Webdunia|
கே‌ள்‌வி: வீட்டிற்கு முன்பு ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பதற்கு முன்பு சாணியை தெளித்தோ அல்லது தண்ணீர் தெளித்தோ கோலம் போடுகிறார்கள். இவ்வாறு கோலம் போடுவதற்கான அர்த்தம் என்ன? அது போடாமலிருந்தால் என்ன ஆகும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

பொதுவாக, தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்து வாழ்கிற வாழ்க்கை முறை. மற்றவர்களை விட நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் தெளித்து வாசல் பெருக்கும்போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது.
மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி எல்லாம் வருகிறார்கள் என்று ஐதீகம் இருக்கிறது. அவர்களை வரவேற்கும் விதமாகவும் ஒரு மங்களச் சின்னமாக தமிழர்கள் வாழ்க்கை முறையில் இருந்து கொண்டு இருக்கிறது.
அதிலும் அந்த மாக்கோலம் இடுதல் என்பது தனிச்சிறப்பு. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது. தானம், தர்மத்தையும் குறிக்கிறது. வரவேற்பு சரியில்லை அப்படி என்று சொல்வார்கள் இல்லையா, அது நன்றாக இருப்பதுதான் இந்த கோலமிடுதல்.


இதில் மேலும் படிக்கவும் :