வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2016 (10:09 IST)

தேமுதிகவை பிளவுபடுத்தும் முயற்சிக்கு துணை போகாதீர்கள் : விஜயகாந்த் உருக்கம்

தேமுதிகவை உடைப்பதற்காக நடக்கும் சதி செயலுக்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் துணை போகக்கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.


 

 
3 எம்.எல்.ஏக்கள் உட்பட சில கட்சி நிர்வாகிகள் வெளியேறியுள்ள நிலையில், தேமுதிக சார்பில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை செயற்குழு கூட்டம் நடந்தது.
 
அந்த கூட்டத்தில், திமுக, அதிமுகவிற்கு எதிராக ம.ந.கூட்டணி மற்றும் த.மா.கா ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்ததற்காக விஜயகாந்திற்கு பாராட்டும், கட்சிக்கு எதிராக செயல்பட்ட சந்திரகுமார் உட்பட சில நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கியதை வரவேற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
 
அதன்பின் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது “தேமுதிகவில் பிளவை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர். கட்சி நிர்வாகிகள் சிலரை இழுக்க முயற்சிகள் நடக்கிறது என்பது எனக்கு தெரியும். அவர்களுக்கு யாரும் துணை போகக்கூடாது. 
 
தேமுதிகவிலிருந்து விலகி மற்ற கட்சிகளுக்கு சென்றவர்களின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும். அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்று என்று கூறித்தான் நாம் தேமுதிகவை தொடங்கினோம். அதனால், அந்த இரண்டு கட்சிகளுடன் மாறி மாறி நாம் கூட்டணி வைத்தால், இன்னும் இரண்டு தேர்தலில் கட்சி காணாமல் போய்விடும். அதற்கான வேலைகளை அதிமுக, திமுக கட்சிகளே செய்துவிடும். 
 
எனவேதான் நாம் வேறு முடிவு எடுக்க வேண்டியதாயிற்று. நான் கட்சி ஆரம்பித்த போது, எந்த நம்பிக்கையில் என்னை நம்பி வந்தீர்களோ, அதோ நம்பிக்கையோடு என்னோடு இருங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் செய்வேன்” என்று உருக்கமாக பேசினார் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது.