வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : வியாழன், 31 மார்ச் 2016 (13:17 IST)

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே லாரிகளில் பணமா?: ராஜேஷ் லக்கானி விளக்கம்

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே கண்டெய்னர் லாரிகளில் பணம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.


 

 
சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார்.
 
சென்னை விமான நிலையத்தில் அவர் இது குறித்து செய்தியாளரகளிடம் கூறியதாவது:–
 
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை யொட்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
 
தற்போது தேர்தல் பணிகள் எந்த அளவு முடிந்துள்ளது, இன்னும் என்னென்ன ஆயத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக விவாதிக்க டெல்லியில் இந்திய துணை ஆணையர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் நான் பங்கேற்கிறேன்.
 
தமிழகத்தில் தேர்தலுக்காக செய்துள்ள பணிகள் குறித்து இதில் விரிவாக எடுத்து சொல்கிறேன்.
 
கேள்வி:– பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது?
 
பதில்:– தமிழகத்தில் இதுவரை ரூ.16 கோடிக்கும் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
இதில் உரிய ஆவணங்களை காட்டியதின் பேரில் முறையான விசாரணை நடத்தி 95 சதவீதத்துக்கும் மேல் பணம் உரியவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது.
 
கேள்வி:– இந்திய தேர்தல் கமிஷனர் நஜீம்ஜைதி தமிழகத்துக்கு மீண்டும் வர இருக்கிறாரா?
 
பதில்:– தேர்தல் அதிகாரிகள் வரும் தேதி முடிவாகவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கப்படும்.
 
கேள்வி:– சிறுதாவூர் பங்களா அருகே கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களும் புகார் கூறி இருக்கிறார்களே, கண்டெய்னர் லாரிகளில் பணம் இருந்ததாக குற்றம் சாட்டுகிறார்களே?
 
பதில்:– சிறுதாவூரில் கண்டெய்னர் லாரிகளில் என்ன இருந்தது? எதற்காக அவை அங்கு நிறுத்தப்பட்டிருந்தது என்பது பற்றி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன்.
 
அவர்களது அறிக்கைக்காக காத்திருக்கிறேன். கண்டெய்னர்களில் பணம் இருப்பது உண்மை என்றால்தான் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். வதந்திகளை வைத்து உடனே நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.