1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Updated : வியாழன், 10 மார்ச் 2016 (12:38 IST)

பழம் நழுவி பாலில் விழும் என்று நாங்கள் காத்திருக்கவில்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

பழம் நழுவி பாலில் விழும் என்று பாஜக காத்திருக்கவில்லை என்றும், யார் கூட்டணி அமைத்தாலும், அமைக்க விட்டாலும் பாஜக தனது பலத்துடன் தேர்தலை சந்திக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை யானைக்கவுனியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை  “திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது இயலாமையால் அமைந்த ஒன்று. 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அமைத்த கூட்டணி போல், இந்த முறையும் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு முழுமையான கூட்டணி உருவாக வேண்டும் என்பதே என் நோக்கம்.
 
ஒவ்வொரு கட்சியின் தலைவரின் பேச்சுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. தமிழர்களுக்கு மாற்றம் வர வேண்டும் என்பதை அனைத்து தலைவர்களும் உணர வேண்டும்.  தனித்தனியாக பிரிந்திருந்தால் வெற்றி பெற முடியாது.
 
அதனால், யார் முதலமைச்சர் வேட்பாளர், யார் தலைமையில் கூட்டணி போன்ற பிரச்சனைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு, ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற முடியும். கூட்டணிக்காக அழைப்பதால் நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. 
 
பழம் நழுவி பாலில் விழுமோ.. இல்லை காலில் விழுமோ.. ஆனால் பாஜக எதற்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை.  சரியான கூட்டணி அமையவில்லை என்றாலும், பாஜக 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் பலத்துடன் உள்ளது” என்று தமிழிசை கூறினார்.