வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2014 (15:28 IST)

வைரமுத்து வரிகளை பாடும் இளையராஜா..... சீனு ராமசாமியின் பல்டி அறிக்கை

வைரமுத்துவுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் இளையராஜா. ஆனால் அவருடன் எப்படியாவது இணைவதற்காக ஆயக்கலைகளில் அறுபது சதவீதத்தை பிரயோகித்துப் பார்த்துவிட்டார் வைரமுத்து. அவரது இன்னொரு முயற்சியின் அண்டர்கிரவுண்ட் மூவ்தான் சீனு ராமசாமி படத்தில் வைரமுத்து வரிகளை இளையராஜா பாடுகிறார் என்பது.
ஏதோ பாடலே பதிவாகிவிட்டதைப் போன்று நேற்றுவரை பேசிக் கொண்டிருந்த சீனு ராமசாமி பகை தீரட்டும், தீமை தீரட்டும் என பக்திமார்க்கமாக ஒரு பல்டி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை -
 
"இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் தத்தெடுத்த மகனைப் பற்றிய உறவை மையப்படுத்தி ஒரு தாயின் பாடல் இடம்பெறுகிறது. இதைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுத, யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இந்தப் பாடலை யாரைப் பாடவைக்கலாம் என்ற யோசனையில் என் ஆழ்மனதில் தோன்றியவர் இசைஞானி இளையராஜா. 
 
இதை இப்படத்தின் இசை அமைப்பாளர் யுவனிடமும், தயாரிப்பாளர் லிங்குசாமியிடமும் தெரியப்படுத்தினேன். யுவன் தன் அப்பாவிடம் நான் கேட்கிறேன் என்றார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. 
 
தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மாதிரியான ஒரு பாடலை இசைஞானி பாடினால் எப்படி இருக்கும்? ஆனால் சில நண்பர்கள் இதனை வேறுமாதிரித் திரித்து எழுதிவருகின்றனர். இதைப் பகை முற்றுப்பெற்ற காலமாக நான் பார்க்கிறேன். 
 
இரண்டு பெருங்கலைஞர்களின் பெருந்தன்மை சம்மந்தப்பட்ட விஷயம் இது. நான் இருவரிடமும் வரம் கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன். ‘பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்' - என்ற பாரதியின் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன. இணைத்து வைக்கும் கரங்களே, என்னை ஆசீர்வதியுங்கள்."
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
இளையராஜா, வைரமுத்து பகை என்னவோ இஸ்ரேல், பாலஸ்தீன பகை மாதிரியும் தினம் பல உயிர்கள் பலியாவது போலவும் சீனு ராமசாமி ஃபீல் பண்ற அளவுக்கு ஒன்றும் கெட்டுப் போகலையே. இளையராஜாவும், அவரது ரசிகர்களும் வைரமுத்துவுடன் மீண்டும் சுமூகமாகப் போக விரும்பாத போது மீண்டும் மீண்டும் இளையராஜாவை இப்படி அறிக்கை, பேட்டி என்றெல்லாம் டார்ச்சர் செய்வது அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது. சீனு ராமசாமி பகையை முறிக்கிறேன் என்று புதிய பகையை உருவாக்கமலிருக்க கடவுள் அருள் புரியட்டும்.