வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (19:07 IST)

மோடியும் ஹிட்லரும் - நந்திதா தாஸின் கமெண்ட்

எந்த கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்களின் கரிசனத்தை பெற நினைக்கும் ஸ்டார் நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற அனைத்து கலைஞர்களும், சினிமா நட்சத்திரங்களும் பாஜக வின் காவிமய கொள்கைக்கும், மோடியின் பகட்டு அரசியலுக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். அதற்காக அவர்கள் யாரும் காங்கிரஸை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை.
நந்திதா தாஸ் சினிமா தாண்டி சமூக கரிசனம் உள்ள நடிகை. குஜராத்தில் மோடி அரசின் அனுமதியுடன் நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தையும், படுகொலைகளையும் வளர்ச்சியின் பெயரால் மூடி மறைக்கப் பார்க்கிற தந்திரத்தை ஒரு கும்பல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. குஜராத்தின் வளர்ச்சி என்பது ஊதி பெரிதாக்கப்பட்ட கற்பனை என்பதை முன்பே பலரும் ஆதாரத்துடன் இணையத்தில் பேசி வந்தனர். இப்போது ஜெயலலிதாவும், ஸ்டாலினுமே அந்த காற்றடைத்த பலூனை ஆதாரங்களுடன் உடைத்து வருவதை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் இந்த வளர்ச்சி குறித்த மூடநம்பிக்கைக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக ஹிட்லரை குறித்த செய்தியை நந்திதா தாஸ் கூறியுள்ளார். 
 
ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லரின் காலத்தில்தான் போடப்பட்டன. ஐரோப்பா நகரங்களை இணைக்கும் சிறந்த சாலைகளாக இவையே இப்போதும் கருதப்படுகின்றன. ஹிட்லரின் காலத்தில்தான் ஜெர்மனியின் சிறந்த மருத்துவமனைகள் கட்டப்பட்டன. ஹிட்லர் இசை ப்ரியர், சைவ உணவுப் பழக்கம் கொண்டவர், அவர் மது குடிப்பதில்லை. ஆனால் இந்த காரணங்களுக்காக அவரை உலகில் யாரும், ஏன் ஜெர்மானியர்கள் கூட நினைவுகூர்வதில்லை - இவ்வாறு நந்திதா தாஸ் கூறியுள்ளார்.
 
ஹிட்லராவது ரோடு போட்டு மருத்துவமனைகள் கட்டினார். மோடி ஆதரவாளர்கள் சைனாவிலும், ஜெர்மனியிலும் உள்ள சாலைகளையும், குடியிருப்புகளையும் குஜராத்தில் உள்ளதாக இணையத்தில் கட் அண்ட் பேஸ்ட் செய்து மோடி மஸ்தான் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்தவரை சிறந்த நிர்வாகி என்று சொல்வது அப்பாவித்தனமா அயோக்கியத்தனமா?