வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (15:21 IST)

பப்பரப்பா... சினிமா வேன் விபத்தில் ஊழியர் பலி

பப்பரப்பா... தமிழில் தயாராகும் ஒரு படத்தின் பெயர். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியிலுள்ள கெரடா என்ற கிராமத்தில் நடந்தது. இதன் படப்பிடிப்புக்கு தேவையான படப்பிடிப்புக் கருவிகளை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதில் வேனில் இருந்த ஊழியர் ஒருவர் பலியானார்.
 
குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு எந்த வாகனத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று விதி இருக்கிறது. அந்த டைம் பிரீட் முடிந்த காலாவதியான வாகனங்களைதான் தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு கம்பெனிகள் பயன்படுத்தி வருகின்றன. எந்த போக்குவரத்து நொரிசலிலும் அந்த கூண்டு வண்டிகளை அடையாளம் கண்டு விடலாம்.
 
அப்படியொரு எக்ஸ்பயரி டேட் முடிந்த ஒரு டப்பா வேனில் பப்பரப்பா படத்தின் படப்பிடிப்புக் கருவிகளை ஏற்றி ஊட்டியிலுள்ள கெரடா ஊருக்கு அனுப்பியுள்ளனர். அங்குதான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மலையேறி வந்த வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் ஒரு சுற்றுச் சுவர், இரு வண்டிகள் சேதமடைந்தன. வேனின் நிலைமை?
 
நெறுங்கிய அப்பளமானது வேன். அதில் பயணித்த லைட்மேன்கள் சிவா மற்றும் மோகன் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு சிவா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணமடைந்த சிவாவுக்கு லட்சுமி (22) என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
 
படப்பிடிப்பு கம்பெனிகளின் வேன்களையும் பள்ளி வாகனங்கள் போல் கண்காணிக்க வேண்டிய தேவையை இந்த விபத்து உணர்த்தியுள்ளது.