செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (12:24 IST)

இரண்டு சாக்கடைகள் கொண்ட நகரம் - கமலின் வித்தியாசமான பிறந்தநாள் அறிக்கை

கடந்த 2004 -ஆம் ஆண்டிலிருந்து ஆகஸ்ட் 22 -ஆம் தேதி சென்னையின் பிறந்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு 375 -வது பிறந்ததினம்.
அதனை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். கமல்ஹாசன் சென்னையின் பிறந்தநாளை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம்...
 
ஒரு கடற்கரை கிராமமாக தொடங்கி, கிழக்கிந்திய கம்பெனி, போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சு போன்ற பலர் படையெடுத்து வெல்ல முயன்று கடைசியில் ஆங்கிலேயர் தக்க வைத்துக்கொண்ட ஒரு அழகான தீவு. இரண்டாற்றின் கரை என்று ஸ்ரீரங்கத்தை சொல்வார்கள். சென்னையும் இரண்டாற்றின் கரைதான். அதற்கு இன்று 375 வயதாகி இருக்கிறது. இந்த இளம் தாயை, இரு நதி கொண்ட இரண்டாற்றின் கரையாகிய இந்த ஊரை, இரண்டு சாக்கடைகள் கொண்ட நகரமாக மாற்றிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு. 
 
இதை மாற்றும் திறமையும் நமக்கு உண்டு. அதை செய்தால் சரித்திரத்தில் நாம் இரண்டு நதிகளை சுத்திகரித்து புதுப்பித்த வித்தகர்களாக போற்றப்படுவோம். இல்லையேல் நாம் வாழ்ந்த இக்காலத்தின் சரித்திரம் நல்ல இரு நதிகளை சாக்கடையாக மாற்றிய ஜனக்கூட்டத்தின் சரித்திரமாக எழுதப்படும். அதை நினைவில் கொண்டு பெற்றதை கொண்டாடுவோம், கற்றதை போற்றுவோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது சென்னைக்கு. 
 
- இவ்வாறு தனது அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.