வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 18 ஜூலை 2015 (15:04 IST)

விஷால் கோவிச்சுக்க மாட்டார் - பெயரை மாற்றிய விஷ்ணு

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய ராதிகாவும், ஸ்ரீப்ரியாவும் சீனியர் நடிகர்களிடம் உள்ள ஒற்றுமை ஜுனியர்களிடம் இல்லை என்று இளம் நடிகர்களை மட்டம் தட்டினர். ஆனால், உண்மை என்ன? சீனியர் நடிகர்கள் இளம் நடிகர்களாக இருந்த போது அவர்களிடையே இருந்த போட்டி பொறாமையில் சின்ன சதவீதம்கூட இன்றைய இளம் நடிகர்களிடம் இல்லை. அதற்கு உதாரணமாக நடந்தது, நேற்றைய நடிகர் விஷ்ணுவின் பிறந்தநாள் விழா.
 
வெண்ணில கபடிக்குழுவில் அறிமுகமான விஷ்ணுவின் சமீபத்திய படங்கள் - முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை - நன்றாக ஓடின. இதற்கெல்லாம் தனது நண்பர்கள்தான் காரணம் என்றார் பத்திரிகையாளர்களிடம். முக்கியமாக விஷால், ஆர்யா, விக்ராந்த், மற்றும் உதயநிதி. "இவர்கள் எனக்கு தக்க சமயத்தில் நல்ல உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் என்னுடைய அண்ணன் மாதிரி. எனக்கு ஒரு பிரச்சனை வந்தால் முதலில் உதவி செய்யும் அளவிற்கு என்னுடன் பழகி வருகிறார்" என்றார்.
 
விஷ்ணு தற்போது தனது பெயரை விஷ்ணு விஷால் என்று மாற்றியுள்ளார். விஷ்ணுவின் இயற்பெயர் விஷால். அவர் நடிக்க வந்தபோது விஷால் முன்னணி நடிகராக வளர்ந்து வந்து கொண்டிருந்ததால் விஷ்ணு என்ற பெயருடன் அறிமுகமானார். ஆனாலும், இயற்பெயர் இல்லாதது அவரை உறுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.
 
"விஷ்ணு பெயருடன் என்னுடைய இயற்பெயரும் இணைந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். விஷால் கோபித்துக் கொள்ளமாட்டார் என்பதால் என் பெயரை விஷ்ணு விஷால் என்று தற்போது மாற்றிக் கொண்டுள்ளேன்" என்றார்.