அப்பாவுடன் மோத விரும்பாத ஜேசன் சஞ்சய்.. ‘ஜனநாயகன்’ ரிலீஸால் தள்ளி போகும் ‘சிக்மா’
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம், வரும் ஜூலை 24-ம் தேதி உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ள நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜேசன் சஞ்சய் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம், முதலில் ஜூலை 31-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தந்தை விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டுடன் மோதலை தவிர்ப்பதற்காக, 'சிக்மா' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
சுந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா', ஒரு அதிரடியான 'ஹைஸ்ட்' மற்றும் புதையல் வேட்டை தொடர்பான நகைச்சுவை கலந்த திரைப்படமாகும். இப்படத்திற்காக ஜேசன் சஞ்சய் மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் திட்டமிடலை நடிகர் சுந்தீப் கிஷன் பெரிதும் பாராட்டியுள்ளார்.
ஒரு இளம் இயக்குநராக, காட்சிகளை வடிவமைப்பதில் ஜேசன் சஞ்சய் காட்டிய தெளிவு பலரையும் ஈர்த்துள்ளது. தந்தை விஜய் அரசியலில் முதலமைச்சராகச் சாதித்த நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் தனது தடம் பதிக்கத் தயாராகி வருவதால், விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
Edited by Siva
