ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
தளபதி விஜய் அரசியலில் குதித்துள்ள நிலையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக கருதப்படும் ஜனநாயகன் சென்சார் சிக்கல்களில் சிக்கியுள்ளது. இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதால் ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான 'தெறி' திரைப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்த இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது சமூக வலைதள பக்கத்தில், "ஐபிஎஸ் விஜயகுமார் வரும் 27-ஆம் தேதி தனது டியூட்டியை ஆரம்பிக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்த தெளிவற்ற நிலைக்கு மத்தியில், பழைய பிளாக்பஸ்டர் படமான 'தெறி'யைத் திரையில் மீண்டும் பார்க்க ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
Edited by Siva