விஷ்வநாத் அண்ட் சன்ஸ் : சூர்யா பாடும் புதிய பாடல்! கென் கருணாஷ் வரிகளில் ஜி.வி.பிரகாஷ் செய்யும் மேஜிக்!
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் விஷ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றன. அந்த வகையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள பிரத்யேகத் தகவல் ஒன்று இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள இத்திரைப்படத்தில், 'சஞ்சய் விஷ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். ஏற்கனவே 'மாற்றான்', 'அஞ்சான்' போன்ற படங்களில் சூர்யா பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலும் அவர் ஒரு பாடலைத் தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்பெஷல் பாடலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. நடிகர் கருணாஷின் மகனும், 'அசுரன்' பட புகழ் நடிகருமான கென் கருணாஷ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியராகவும் தன் திறமையை நிரூபித்து வரும் கென் கருணாஷ், சூர்யாவின் குரலுக்கு ஏற்றவாறு எனர்ஜிட்டிக்கான வரிகளை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ ஆகியோருடன், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் மூத்த நடிகை ரவீணா டாண்டன் மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
