வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 30 மே 2015 (10:36 IST)

உண்மைக்கு புறம்பாக பேசும் விஷால் - சரத்குமார் அறிக்கை

நடிகர் சங்கம் தொடர்பாக புதுக்கேட்டையில் விஷால் தெரிவித்த கருத்துக்கு மறுப்பாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வருமாறு.
 
தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் விஷால் ஊடகங்களுக்கு பல்வேறு தவறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். புதுக்கோட்டையிலும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது குறித்து சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுத்தப்படி கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டது. 
 
இதுகுறித்து சிலருக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நடிகர் விஷால் மற்றும் சிலரை சிறப்பு செயற்குழுவிற்கு வரவழைத்து அவர்களுக்கும் தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கட்டிட பணிகள் தொடங்காததற்கு காரணம் பூச்சி முருகன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குத்தான் என்பதை விஷால் உள்பட அனைத்து உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள். 
 
சங்கக்கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று எங்களை போலவே ஆர்வமுடன் இருக்கும் விஷாலின் எண்ணத்தை வரவேற்கிறேன். கலைத்துறையின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் நடிகர் சங்கம் எத்தகைய ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழ் திரைப்படத்துறை நன்கு அறியும். 
 
தமிழ் திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்ப்பதற்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகள் உடனுக்குடன் கலந்துபேசி ஒன்றுபட்ட முடிவுகளை எடுத்து வருவதையும் அனைவரும் அறிவார்கள். கொம்பன், லிங்கா, உத்தமவில்லன் உட்பட பல்வேறு திரைப்படங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடிகர் சங்கம் முழுமனதுடன் பாடுபட்டது அனைவருக்கும் தெரியும். 
 
தலைவரை எதிர்க்கவில்லை ஆனால் சங்கக்கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று அடிக்கடி விஷால் தெரிவித்து வருகிறார். கட்டிடம் கட்ட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கலாம். ஆனால் அது எங்கள் லட்சியம். கட்டிடம் கட்ட போட்ட ஒப்பந்தத்தை அந்த பொதுக்குழுவில் கைதட்டி வரவேற்றவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வழக்கு போடுகிறார்கள். 
 
அவர்களுடன் இணைந்து விஷால் செயல்படுகிறார். இது எந்தவகையில் நியாயம்?. நேற்று முன்தினம் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்துக்கு பூச்சிமுருகனை அழைத்து சென்ற விஷாலை, தலைவர் எஸ்.எம்.இசையரசன், செயலாளர் எம்.பி.சுப்பிரமணியன், பொருளாளர் டி.வி.ராஜேந்திரன் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட உரிமை பெற்ற புதுக்கோட்டை உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 
 
நடிகர் சங்கத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது போல, அவ்வப்போது பேட்டி கொடுத்துக்கொண்டு உண்மைக்கு புறம்பாக பேசிவருவது வேதனை அளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்த இனியாவது விஷால் இத்தகைய செயல்களில் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். 
 
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.