விஷால் விவகாரம் - வெள்ளையறிக்கை வெளியிடும்படி சரத்குமாருக்கு நாசர் கடிதம்

Mahalakshmi| Last Modified திங்கள், 1 ஜூன் 2015 (10:26 IST)
புதுக்கோட்டையில் நாடக நடிகர்கள் மத்தியில் பேசிய விஷால், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் விவகாரத்தில் நடிகர் சங்க நிர்வாகிகளை குறைகூறினார். அதற்கு சரத்குமார் பதிலறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் நடிகர் நாசர் - விஷால் அணியில் தீவிரமாக செயல்படுவதாக கூறப்படுகிறவர் - சரத்குமாருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஷால், புதுக்கோட்டையில் நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக பேசிய பேச்சினை தொடர்ந்து தாங்கள் எழுதிய அறிக்கையை படிக்க நேர்ந்தது. ஒரு உறுப்பினர் சங்க நிர்வாகிகளின் கருத்துக்கு மாறுபட்டு செயல்பட்டால் அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்து நடவடிக்கை எடுப்பதுதான் முறை என்று நான் நினைக்கிறேன். பத்திரிகை அறிக்கை மூலமாக எச்சரிப்பது புதிய அணுகுமுறையாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் நடந்தேறிய சிறப்பு செயற்குழு கூட்டத்தில், “தை மாதத்துக்குள் வழக்கு முடிவுக்கு வரும். அப்படியில்லாவிட்டால் போடப் பட்ட ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு எல்லோரையும் கலந்தாலோசித்து நடிகர் சங்கத்துக்கு புதுக்கட்டிடம் தொடங்கப்படும்” என்று அறிவித்தீர்கள்.

இன்று தை கடந்து வைகாசியும் முடியப்போகிறது. எப்போது கூடப்போகிறோம்? எங்கே கலந்தாலோசிக்கப் போகிறோம்?
குழம்பி கிடக்கும் இக்கட்டிடப் பிரச்சினை குறித்து மட்டுமே ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டி உள்ளும் புறமும் தெளிவாகத் தெரியும் வகையில் வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டாலே போதும் தங்கள் மீதும் மற்ற நிர்வாகிகள் மீதும் பனியென சூழ்ந்திருக்கும் சந்தேகங்கள் மறைந்துவிடும்.

திரையுலகப் பிரச்சினைகளில் நம் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாகப் பங்கெடுத்து தீர்வு காண்கிறது என்பதை நான் நன்கறிவேன். அதேபோல் நடிகர் சங்கப் பிரச்சினைகளையும் பாரபட்சமற்று அணுக வேண்டும் என்பது தான் எல்லா சங்க உறுப்பினர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :