வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (16:46 IST)

படம் எடுத்தேன், பிச்சைக்காரன் ஆனேன் - ஒரு ஐயோபாவ தயாரிப்பாளர்

சினிமா என்பது வர்த்தகத்தையும் உள்ளடக்கியது. போட்ட பணத்தை எடுக்க அறுத்துநான்கு கலைகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை தெரியாமல் பலரும் சினிமா என்ற ஜிகினா படுகுழியில் கால் வைத்துவிடுகிறார்கள்.
 
நாஞ்சில் பி.சி.அன்பழகனை அப்படி ஒன்றும் தெரியாதவர் என்று கூற முடியாது. காமராஜ் (காமராஜர் அல்ல), அய்யாவழி போன்ற படங்களை ஏற்கனவே இயக்கியவர். இந்த இரு படங்களும் சினிமாவின் அரிச்சுவடி தெரியாதவர் பி.சி.அன்பழகன் என்பதை உணர்த்தியவை. தோல்வியடைந்தவை.
 
இருந்தும், நதிகள் நனைவதில்லை என்ற படத்தை அவர் தயாரித்து இயக்கினார். அது அவரது விருப்பம். நதிகள் நனைவதில்லை படத்தைப் பார்க்க ரசிகர்கள் யாரும் தயாராக இல்லாததால் திரையிட்ட இரண்டாவது நாளே படத்தை திரையரங்குகளிலிருந்து தூக்க ஆரம்பித்தனர். இதனால் கசப்புற்று ஓர் அறிக்கை வெளியிட்டார் பி.சி.அன்பழகன்.
 
என்னுடைய ஒரு வீட்டை விற்று படத்தை எடுத்தேன். இன்னொரு வீட்டை விற்று படத்தை வெளியிட்டேன். படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், படத்தை சில நாள்களிலேயே தூக்கிவிட்டார்கள்.
 
ஆபரேஷன் தியேட்டர் தவிர அனைத்து தியேட்டர்களிலும் தங்கள் படமே ஓட வேண்டும் என்று நினைக்கிற பேராசைக்காரர்களால் சிறு பட்ஜெட் படங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வியாழக்கிழமைவரை செல்வந்தராக இருக்கும் தயாரிப்பாளர்கள் வெள்ளிக்கிழமை பிச்சைக்காரர்களாகிவிடுகிறார்கள். அந்தப் பட்டியலில் நானும் இணைந்துவிட்டேன் என்று அறிக்கை முழுக்க அழுகை மழை.
 
நதி நனைந்ததோ இல்லையோ அன்பழகன் அழுகையில் முழுக்க நனைந்திருக்கிறார்.