1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Webdunia

இன்னும் ரிசல்டே வரவில்லை.. அதற்குள் செந்தில் பாலாஜி வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவு..!

இன்னும் ரிசல்டே வரவில்லை.. அதற்குள் செந்தில் பாலாஜி வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவு..!
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சராக இருந்தபோது, மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாக கூறப்படும் சுமார் ரூ.397 கோடி ஊழல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த இ.சரவணன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த முறைகேட்டில் செந்தில் பாலாஜி மற்றும் TANGEDCO தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், இந்த ஊழல் புகாருக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதால் வழக்கை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தது. ஆனால், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
 
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், இந்த விசாரணைக்குத் தமிழக அரசு மற்றும் டான்ஜெட்கோ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva