1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 11 ஜனவரி 2015 (07:51 IST)

படம் ஓடவில்லை என கூறி விநியோகஸ்தர்களே லிங்கா படத்தை கொன்று விட்டார்கள் - தயாரிப்பாளர் ஆவேசம்

லிங்கா படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. ரஜினி இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு நஷ்டஈடு வாங்கித்தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.



 
இந்தப் போராட்டத்தை சீமான் தொடங்கி வைக்க, தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் முடித்து வைத்தார். இதனால், போராட்டத்துக்குப் பின்னால் ரஜினிக்கு எதிரான அரசியல் தூண்டுதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
 
இந்நிலையில் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், லிங்காவை வெளியிட்ட அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராக்லைன் வெங்கடேஷ், படம் வெளியான உடனேயே விநியோகஸ்தர்கள்தான் படம் சரியில்லை, எந்த ஷேnவும் ஃபுல்லாகவில்லை என்று கூறி படத்தை கொன்றுவிட்டனர் என குற்றம்சாட்டினார்.
 
லிங்காவை மொத்தமாக ஈராஸ் நிறுவனத்துக்கு தான் விற்றுவிட்டதாகவும், அவர்கள் அம்மா கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிட்டனர் எனவும் அவர் கூறினார். விநியோகஸ்தர்கள் சொல்வது போல் 200 கோடிக்கு மேல் படத்தை விற்பனை செய்ததை நிரூபித்தால் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை செய்கிறேன். இல்லாவிட்டால் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசப்பட்டார்.
 
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தற்போது வேந்தர் மூவிஸுக்கு படங்கள் வாங்கித் தருவது போன்ற வேலைகளை செய்து வருகிறார். லிங்காவை தமிழகத்தில் வெளியிட்டது வேந்தர் மூவிஸ் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிரதிநிதியாகதான் சிவா அனைத்து இடங்களிலும் பேசினார், செயல்பட்டார். ஆனால் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் வேந்தர் மூவிஸ் பெயரை யாரும் பயன்படுத்தவில்லை. ராக்லைன் வெங்கடேஷும், படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல்ஸ், சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிட்டது என்றே குறிப்பிட்டார்.
 
போராட்டம் நடத்திய விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்றது வேந்தர் மூவிஸ். ஆனால் தற்போது அதன் பெயரை இருட்டடிப்பு செய்து அம்மா கிரியேஷனை முன்னிறுத்துகிறார்கள். இந்த திடீர் மாற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.