வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 13 ஜனவரி 2015 (10:56 IST)

ரஜினி குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட லிங்கா அதிருப்தி விநியோகஸ்தர்கள் - சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயார் என அறிவிப்பு

லிங்கா பட விவகாரம் இப்போதைக்கு ஓயும்போல் தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், விநியோகஸ்தர்களே படத்துக்கு எதிராக பேசி படத்தை கொன்றுவிட்டனர் என்று பேசியது எதிர்முகாமை கொஞ்சம் ஷேக் செய்துள்ளது.


 
 
இந்நிலையில் வேந்தர் மூவிஸ் சிவா, விநியோகஸ்தர்களுக்கு உரிய நஷ்டஈடு பெற்றுத் தருவேன் என்று உறுதி அளித்தார். அத்துடன், இந்தப் பிரச்சனைக்கு மூலகாரணமாக இருந்த சிங்காரவேலன் தவிர்த்து பிற விநியோகஸ்தர்களை அழைத்தவர், லிங்கா பிரச்சனையில் தயாரிப்பாளரையும், ரஜினியையும் காயப்படுத்திவிட்டீர்கள். அதனால் மன்னிப்பு கடிதம் எழுதித் தாருங்கள் என்று கேட்டார். ஆனால், அப்படி மன்னிப்பு கடிதம் எழுதித்தர விநியோகஸ்தர்கள் மறுத்துவிட்டனர்.
 
அதனைத் தொடர்ந்து திருச்சி - தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன், செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உள்பட சிலர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள்,
 
லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கேட்டு நாங்கள் உண்ணாவிரதம் இருந்ததுக்கு வேந்தர் மூவிஸ் சிவா மன்னிப்பு கடிதம் கேட்டுள்ளார். நாங்கள் ஏன் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? ரஜினியை காயப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார். அவரை காயப்படுத்தும்படி நாங்கள் எதுவும் செய்யவில்லை.
 
படம் வெளியான சில நாள்களிலேயே படத்தின் வசூல் குறித்து சொன்னது, நஷ்டம் ஏற்படுமோ என்ற பதற்றத்தில் நாங்கள் சொன்னது. ரஜினியின் பிறந்தநாளில் ஏன் படத்தை வெளியிட வேண்டும். அதுஎன்ன தேசிய விடுமுறையா என்று பேசியதற்கு ரஜினியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேnம்.
 
படத்தின் தயாரிப்பாளரிடம் எந்தவிதத்திலும் மன்னிப்பு கேட்க முடியாது. உரிய நஷ்டஈடு தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்.
 
- இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.