48 ஆண்டுகளை நிறைவு...பாரதிராஜாவின் பயணத்தில் மறக்க முடியாத கிழக்கே போகும் ரயில்
தமிழ் சினிமாவில் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் உணர்வுகளையும் இயல்பான தன்மையுடன் திரையில் பதிவு செய்த இயக்குநர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. அவரது முதல் படமான 16 வயதினிலே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் கிழக்கே போகும் ரயில் .
1978-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் நடிகர் சுதாகரும், நடிகை ராதிகாவும் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமானார்கள். 16 வயதினிலே படத்தை தயாரித்த அம்மன் கிரியேஷன்ஸ் சார்பில் ராஜகண்ணுவே இந்தப் படத்தையும் தயாரித்திருந்தார்.
பாரதிராஜாவின் முதல் படத்தில் மயில் என்ற கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த நிலையில், கிழக்கே போகும் ரயில் படத்தில் ரயிலே கதையின் முக்கிய அம்சமாக மாறியது. ஒரு கிராமத்தில் வசிக்கும் எளிய மக்களின் வாழ்க்கை, காதல், உறவுகள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.
படத்தின் கதையை அன்னக்கிளி செல்வராஜ் எழுதியிருந்தார். வசனப் பணியில் கே.பாக்யராஜும் பங்களித்திருந்தார். கிராமத்து மக்களின் இயல்பான பேச்சு வழக்கையும், அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் வகையில் படத்தின் காட்சிகளும் வசனங்களும் அமைந்திருந்தன.
கிழக்கே போகும் ரயில் படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் இசை. இளையராஜா இசையமைத்த பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. குறிப்பாக மாஞ்சோலைக் கிளிதானோ, கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ, பூவரசம்பூ பூத்தாச்சு உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இன்றளவும் இப்பாடல்கள் பழைய தலைமுறை ரசிகர்களின் நினைவுகளில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன. திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடிய இப்படம், சுமார் 365 நாட்கள் வரை வெற்றிகரமாக ஓடியதாக குறிப்பிடப்படுகிறது.
1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான கிழக்கே போகும் ரயில் , தற்போது 48 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும், கிராமத்து வாழ்க்கையை இவ்வளவு இயல்பாகவும் அழகாகவும் பதிவு செய்த படங்களில் ஒன்றாக இப்படம் இன்றும் நினைவுகூறப்படுகிறது.
பாரதிராஜாவின் இயக்கம், சுதாகர் - ராதிகாவின் அறிமுக நடிப்பு, கே.பாக்யராஜின் வசனப் பங்களிப்பு மற்றும் இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள் என பல சிறப்புகளை தன்னுள் கொண்ட கிழக்கே போகும் ரயில் தமிழ் சினிமாவின் முக்கியமான கிளாசிக் படங்களில் ஒன்றாக இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
