வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (11:56 IST)

செவாலியர் விருது ரசிகர்களுக்கு சமர்ப்பணம் - கமல் நெகிழ்ச்சியான பேச்சு

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை அந்நாட்டு அரசு கலை இலக்கியத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. சிவாஜி கணேசன், சத்யஜித் ரே உள்பட நான்கு இந்தியர்கள் கமலுக்கு முன் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.


 

தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த உயரிய விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக ஆடியோ மூலம் பேசியுள்ளார் கமல். அவரது நெகிழ்ச்சியான பேச்சு...

பிரெஞ்சு அரசு கலை இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க முன்வந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன், பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன்.

அந்த விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசனையும், வட நாட்டில் பாமரரையும் அறியச் செய்த சத்யஜித் ரேவையும் கரம் கூப்பி வணங்குகிறேன். இச்செய்தியை, எனக்கு தெரிவித்த இந்திய பிரெஞ்சு தூதருக்கும் எனது நன்றி. இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதை கருதுகிறேன். கலை கடற்கரையில் கை மண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறு பிள்ளைத்தனமானது என்பதை உணர்கிறேன். வயதில்லாமல் எப்போதும் ஆர்ப்பரிக்கும் கலைக் கடல், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து பெருமித மயக்கம் கலைத்து, உப்பிட்டு பெரும் நினைவை உணரச் செய்கிறது.

இதுவரையிலான எனது கலைப்பயணம் தனி மனித பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கை தாங்கி எழுத்தும் கலையும் அறிவித்த பெரும் கூட்டத்துடனே நான் ஏற்ற யாத்திரை இது என்பதை உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள். 4 வயது முதல் என் கை பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இந்த விருது சமர்ப்பணம்.

என் பெற்றோர் இருந்து பார்க்க முடியாத குறையை என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், எனது சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது. நன்றியுடன் கமல்ஹாசன்.