வெள்ளி, 17 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜனவரி 2026 (16:33 IST)

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

kamal
விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி வெளியாகாமல் போனது திரையுலகில் இருக்கும் பலருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் வியாபாரமெல்லாம் நடந்தது. பல தியேட்டர்களில் அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் செய்தார்கள். தற்போது திட்டமிட்டபடி படம் நேற்று வெளியாகாமல் போனதால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நிறைய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

துவக்கத்தில் விஜய்க்கு திரைத்துறையிலிருந்து எந்த ஆதரவும் கிடைக்காமல் இருந்தது. அதன் பின் ஒவ்வொருவராக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க துவங்கினார்கள். அப்படியும் அதிகம் பேர் ஆதரவு கொடுக்கவில்லை. இயக்குனர்களில் அஜய் ஞானமுத்து, மாரி செல்வராஜ், ரஞ்சித், விக்ரமன் போன்ற சிலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர்களில் சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட வெகு சிலரே விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தனர்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர். இந்நிலையில்தான், நடிகர் கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘திரைப்படத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வரையறுக்கப்பட்ட காலக்கெடுடன் கூடிய நடைமுறை தேவை.. படத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நீக்கத்திற்கும் தணிக்கை வாரியம் எழுத்துப்பூர்வமாக காரணத்தை கொடுக்க வேண்டும்..

சினிமா என்பது தனிநபர் உழைப்பு மட்டுமல்ல.. எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு தரப்பின் உழைப்பை சார்ந்தது.. ஒட்டுமொத்த திரையினரும் ஒன்றிணைந்து அரசுடன் இது தொடர்பாக ஆக்கப்பூர்வமான உரையாடல் நிகழ்த்த வேண்டும்’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.