1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. kadhal-sukumar-wishes-deepa-shankar

வெள்ளந்தி மனசுக்காரி தீபா அக்கா! : பிறந்தநாளில் வாழ்த்திய இயக்குநர் காதல் சுகுமார்

தீபா சங்கர்
வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் தனது எதார்த்தமான பேச்சாலும், கள்ளங்கபடமற்ற நடிப்பாலும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பிரபல குணச்சித்திர நடிகை தீபா சங்கர். கார்த்தியின்  கடைக்குட்டி சிங்கம் , சிவகார்த்திகேயனின்  டாக்டர்  மற்றும் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல இரண்டு காதல்  உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த நடிப்பால் குடும்ப ரசிகர்களின் மனங்களை வென்றவர்.
 
இந்நிலையில், நடிகை தீபாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும் திரைப்பட இயக்குநருமான  காதல் சுகுமார், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தீபாவின் நற்குணங்களையும் அவருடனான படப்பிடிப்பு அனுபவங்களையும் நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியான வாழ்த்துப் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 
 
திரையில் வெகுளியாக நடிப்பவர்கள் பலர் இருந்தாலும், நிஜ வாழ்க்கையிலும் அதே கள்ளமற்ற குணத்தோடு வாழ்பவர்கள் வெகு சிலரே. அதில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் தீபா அக்கா.  நான் இயக்குநராக அறிமுகமான  திருட்டு விசிடி  திரைப்படத்தை இயக்கிய காலகட்டத்தில், அவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மிகத் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும், எனது திரைப்படத்தில் அவரை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
 
பொதுவாக, சின்னத்திரைத் தொடர்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களை வெள்ளித்திரைக்கு ஒப்பந்தம் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் இருக்கும். மாதத்திற்கு 20 நாட்கள் வரை சீரியல் தயாரிப்புக்கே தேதி ஒதுக்கிவிடுவதால், இடையில் ஓய்வு நாட்கள் கிடைத்தாலும் கூட அவர்களால் பிற திரைப்படப் படப்பிடிப்புகளில் எளிதில் பங்கேற்க முடிவதில்லை. ஏனெனில் டிஆர்பி ரேட்டிங்கிற்கு ஏற்ப அன்றைய தினங்களில் திரைக்கதையில் திடீர் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம்.
 
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், அவருக்காகப் பொறுமையாகக் காத்திருந்து காட்சிகளைப் படமாக்கினோம். அந்த வெள்ளந்தியான கதாபாத்திரத்திற்குத் தனது நடிப்பால் அத்தனை நேர்த்தியாக உயிர் கொடுத்திருந்தார்.
அண்மையில் ஒரு புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புத் தேதிகள் தொடர்பாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் என்னிடம்,  தம்பி, மொதராத்திரி  பட இயக்குநர் உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டார். அதற்கு நான்,  இல்லைக்கா, என்ன விஷயம்?  என்றேன்.
 
உடனே அவர்,  இல்லைய்யா... அந்தப் படத்திற்காக என்னிடம் 10 நாட்கள் கால்ஷீட் கேட்டிருந்தார்கள். அப்போது பிற வேலைகள் காரணமாக என்னால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை. இப்போது அவரது அடுத்த படத்தில் வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டுப் பேசலாம் என்று தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்க மறுக்கிறார். அதான் கேட்டேன்,  என்று வருத்தத்தோடு கூறினார். பிறர் மனம் எந்த வகையிலும் நோகக் கூடாது என்பதில் அவர் காட்டும் அக்கறை வியக்க வைத்தது.
 
உடனே நான்,  அக்கா, உங்கள் திறமைக்கு எங்கு இருந்தாலும் உங்களைத் தேடி வாய்ப்புகள் வந்து சேரும். நீங்கள் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம், எனத் தேற்றினேன். அதற்கு அவரோ, "இருந்தாலும் பரவாயில்லை தம்பி, நீ அவரைத் தொடர்பு கொண்டால் 'அக்கா வேண்டுமென்றே கால்ஷீட் தர மறுக்கவில்லை என்று மட்டும் சொல்லிவிடு  எனத் திரும்பத் திரும்பக் கூறினார்.
 
அந்த அளவுக்கு யாரையும் புண்படுத்த விரும்பாத தூய உள்ளம் கொண்டவர் தீபா அக்கா. வருங்காலத்தில் மாபெரும் திரை விருதுகளின் மேடைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. அனைவரின் இதயங்களையும் வென்ற அந்த வெள்ளந்தி மனசுக்காரிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
 
இவ்வாறு இயக்குநர் காதல் சுகுமார் தனது பதிவில் தீபா சங்கரின் நற்குணங்களைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.  
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
ரூ.2000 கோடியில் தயாரான ராமாயண எப்படி இருக்கிறது? திரைவிமர்சனம்