11 நாட்களில் ஜனநாயகன் வசூல்... விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதுதான்!
தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பெரிய அளவில் ஓப்பனிங் பெற்ற இந்த படம், தொடர்ந்து கலவையான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை தக்கவைக்க போராடி வருவதாக கூறப்படுகிறது.
இப்படம், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பகவந்த் கேசரி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றாலும், அதன் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு பல மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டடுள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஹெச். வினோத், இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளதால், படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே , முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். மேலும், விஜய்யின் வளர்ப்பு மகள் கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார்.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஜன நாயகன் திரைப்படத்திற்கு முதல் நாளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பின்னர் கலவையான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் எழுந்த விவாதங்கள் காரணமாக வசூல் வேகம் ஓரளவு குறைந்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உலகம் முழுவதும் ரூ.295.92 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.300 கோடி வசூல் மைல்கல்லை எட்ட இன்னும் சில கோடிகள் மட்டுமே தேவைப்படுவதால், வரும் நாட்களில் அந்த சாதனையை படம் எட்டுமா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
