வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 25 ஜனவரி 2016 (05:59 IST)

கெத்து வரி விலக்கு விவகாரம் - ஜனவரி 27 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

கெத்து வரி விலக்கு விவகாரம் - விசாரணை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள, கெத்து தமிழ் திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக் கோரிய மனு குறித்த விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 
 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள தமிழ் திரைப்படம் கெத்து. இது குறித்து, உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் மேலாளர் சரவணமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியிடப்பட்ட கெத்து திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியானது.
 
ஆனால், கெத்து என்ற பெயர் தமிழ் வார்த்தை இல்லை எனக் கூறி கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துள்ளனர். இந்த செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது. 
 
எனவே, கெத்து படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கெத்து என்பது தமிழ் வார்த்தைக்கான ஆதாரங்களைக் கூறி உதயநிதிதி ஸ்டாலின் தரப்பு வாதிட்டனர். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.