வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வியாழன், 31 மார்ச் 2016 (18:17 IST)

கண்டு கொள்ளாத சினிமா உலகம் : கதறும் எடிட்டர் கிஷோரின் தந்தை

சென்ற ஆண்டிற்கான தேசிய விருதுகளில் பட்டியலில் சிறந்த எடிட்டராக தேர்வு செய்யப்பட்டவர் கிஷோர்.


 

 
எதிர்நீச்சல், காஞ்சனா, பரதேசி, ஆடுகளம், விசாரணை மற்றும் பல படங்களுக்கு எடிட்டராக பணி புரிந்தவர் கிஷோர். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது, இரண்டாவது தேசிய விருதை விசாரணை படத்திற்காக பெற்றுள்ளார்.
 
இளம் திறமைசாலி. இவர் மூளையில் ஏற்பட்ட ரத்த அடைப்பு காரணமாக இவர் ஒரு வருடத்திற்கு முன் மரணமடைந்தார். இவரை பற்றி இவரின் தந்தை கூறும்போது “என் மகன் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், அவன் எந்த சினிமா உலகிற்காக இப்படி உழைத்தானோ, அது அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை. 
 
ஆடுகளம் பட வேலையின் போது நடிகர் தனுஷும் அவனும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால்   அவன் இறந்து பின் இதுவரை தனுஷ் எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை. சிவகார்த்திகேயன், சரத்குமார், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் வெற்றி மாறன் ஆகியோர் எனக்கு பண உதவிகள் செய்தனர்.
 
ஆனால், நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த இரண்டு படங்களில் என் மகன் கிஷோர் வேலை செய்ததற்கு ரூ.3 லட்சம் பாக்கியுள்ளது. ஆனால் அவரிடமிருந்து பதிலே இல்லை. ஒருவேளை, அவன்தான் இறந்து விட்டானே.. கொடுக்க தேவையில்லை என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.
 
இந்த விருதுகளால் என்ன பயன். விருதை தாண்டி என் மகன் எதுவும் பெறவில்லை. இந்த சினிமா அவனுக்கு வேற எதுவும் செய்யல. அவன் இறந்த துக்கத்தை பகிர்ந்து கொள்ளக்கூட பல சினிமா பிரமுகர்கள் வரவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.