டிசி படத்தின் முதல் நாள் வசூல்...லோகேஷ் கனகராஜ் செஞ்ச தரமான சம்பவம்!
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற சின்ன பட்ஜெட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், தனது முதல் படத்திலேயே தனக்கென ஒரு தனித்துவமான திரைமொழியை உருவாக்கி கவனம் பெற்றார். அதன்பிறகு வெளியான கைதி , மாஸ்டர் , விக்ரம் , லியோ , கூலி என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான படங்களை இயக்கியுள்ளார்.
குறிப்பாக, முன்னணி ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படங்களை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநராக லோகேஷ் உயர்ந்துள்ளார். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ள லோகேஷ், தற்போது நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
அந்த வகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள டிசி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் நேற்று, (ஆகஸ்ட் 7) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதில் லோகேஷுக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். இருவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்து வருகிறது. குறிப்பாக, இயக்குநராக பல படங்களில் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துப் பார்த்த லோகேஷ், இந்த முறை ஹீரோவாக கையில் துப்பாக்கியுடன் களமிறங்கியிருப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.
மேலும், படத்தின் பின்னணி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு அனிருத்தின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அருண் மாதேஸ்வரனின் வழக்கமான வித்தியாசமான மேக்கிங், லோகேஷின் திரை அறிமுகம், வாமிகா கபியின் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை என பல அம்சங்கள் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் படத்திற்கு பாசிடிவ் கருத்துகள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், டிசி திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.5.70 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோவாக நடித்த முதல் படமே நல்ல துவக்கத்தை கொடுத்தது லோகேஷிற்கு உற்சகத்தை கொடுத்துள்ளது.
