’நானும் ரவுடிதான்’ காட்சிகளை பயன்படுத்தவில்லை.. நயன்தாரா தரப்பு அளித்த பதில் மனு..!
நயன்தாராவின் திருமண வீடியோவில், 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் தனுஷ் தரப்பு மனு தாக்கல் செய்த நிலையில், நயன்தாரா தரப்பு அதற்கு பதிலாக, அந்த காட்சிகளை பயன்படுத்தவில்லை என்று பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவில், 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதற்காக பத்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தனுஷ் தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதற்கு பதில் அளிக்க வேண்டும் என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவில் 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்படவில்லை என்றும், விதி மீறலில் ஈடுபடவில்லை என்றும், பதிப்புரிமை மீறல் எதுவும் இல்லை என்றும், இதில் தனிப்பட்ட காட்சிகளே இடம் பெற்றுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் இரண்டாம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva