அப்துல் கலாம் குறித்த ஆவணப்படம் - கங்கை அமரன் தகவல்

Mahalakshmi| Last Modified வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (14:05 IST)
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் கங்கை அமரன் தன்னை இணைத்துக் கொண்டது நினைவிருக்கலாம். அவர் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு ஆர்.எஸ்.எஸ் தமிழ் மாநில செயலாளர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களுடன் வந்து, அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், அப்துல் கலாமின் கனவை விதைக்க, திரைத்துறையினர் ஆவணப்படம் தயாரித்து வருவதாக குறிப்பிட்டார்.
"இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக சிந்தித்து மாணவர்கள், இளைஞர்களை லட்சிய கனவு மூலம் உயர்த்த பாடுபட்ட மாமனிதர் அப்துல் கலாம். உலக நாடுகளின் பிரச்சனைக்கு அறிவுரை வழங்கிய அவர் உலக ஜோதியாக உருவாகி உள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின், 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்ற பாடல் அப்துல் கலாம் பெயரை உச்சரிக்கும். இது அவருக்கு பொருத்தமான பாடலாக அமைந்துள்ளது. அவர் மறையவில்லை. நம்மிடம்தான் உள்ளார்.

அவரது லட்சிய பயணத்தை தொடர லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் உறுதி எடுத்துள்ளார்கள். கலாம் கனவை விதைக்க திரைப்படத்துறையினர் ஆவணப்படம் உருவாக்கி வருகின்றனர். அதை இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்ப மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

- இவ்வாறு அவர் கூறினார்.
அப்துல் கலாமின் நல்ல குணங்களில் ஒன்று அடுத்தவரை வெறுக்காமல் இருப்பது. ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளில் உள்ள தனது நண்பர்களிடம், அப்துல் கலாமின் நல்ல குணத்தை கடைபிடிக்க கங்கை அமரன் வலியுறுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.


இதில் மேலும் படிக்கவும் :