1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (12:48 IST)

'ராமானுஜன்' ஆங்கிலத் திரைப்படத்தை உலக அளவில் வெளியிட ஒப்பந்தம்

'ராமானுஜன்' திரைப்படம், தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது. இதில், 'ராமானுஜன்' ஆங்கில திரைப்படத்தைப் பன்னாட்டு அளவில் வெளியிட, இதனைத் தயாரித்த 'கேம்பர் சினிமா' (Camphor Cinema)  நிறுவனம், 'வான் ரையான்ஸ் (Von Ryon's) என்டர்டைன்மென்ட்' என்ற  நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, 2014 இறுதியில் இந்த ஆங்கிலப் படம், சர்வதேச அளவில் வெளியிடப்படும்.

 
 
2014 செப்டம்பர் 4 முதல் 14 வரை நடைபெற உள்ள 'டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழா'வில் இப்படம் முதன் முறையாகத் திரையிடப்பட இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் அந்த உலகத் திரைப்பட விழா, உலக அளவிலும் தென்-கிழக்கு ஆசிய நாடுகளிலும் உள்ள தனிப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கிய திரைப்படங்களுக்கு வெற்றிகரமான ஒரு களத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது - தீபா மேத்தாவின் 'Mid-night children', மீரா நாயரின் 'The Reluctant Fundamentalist' உள்பட!
 
'ராமானுஜன்' தமிழ்ப் படம், அண்மையில் வெளியாகி, விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. கணித மேதை ராமனுஜன், கும்பகோணத்திலிருந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தையும், பல்வேறு அலட்சியங்களையும் கடந்து, தமது தன்னம்பிக்கையை இழக்காமல், பேராசிரியர் ஹார்டியின் உதவியுடன் எவ்வாறு இங்கிலாந்தின் மிக உயரிய 'Fellow of the Royal Society' என்ற விருதினை அவர் பெற்றார் என்பதையும், இந்தப் படம் விவரித்தது.
 
திரைக்கதையாசிரியர் - இயக்குநரான ஞான.ராஜசேகரன், மிக விரிவான, ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் 'ராமானுஜனின்' வாழ்க்கை வரலாற்றையும் அவரது சாதனைகளையும் இப்படத்தில் பதிவு செய்துள்ளார். இந்தி நடிகை ரேகாவின் உறவினரும், புகழ்பெற்ற நட்சத்திர ஜோடியான ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரின் பேரனுமான 'அபிநய்', 'ராமனுஜன்' வேடத்திலும், மலையாள நடிகையான 'பாமா', அவரது மனைவி ஜானகி வேடத்திலும் நடித்துள்ளனர். திறமை வாய்ந்த திருமதி சுகாசினி மணிரத்தினம், பிரபல ஆங்கில மேடை - திரைப்பட நடிகரான 'கெவின் மக்கோவன்', ஆகியோருடன், அப்பாஸ், 'நிழல்கள்' ரவி, டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், சரத்பாபு, ராதா ரவி, டி.பி.கஜேந்திரன், 'தலைவாசல்' விசை,  மற்றும் ஆங்கில நடிகர்களான மைக்கேல் லீபர், ரிச்சர்ட் வால்ஷ், ஆகியோரும் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
 
இந்த ஒப்பந்தம் காரணமாக, 'ராமானுஜனின்' புகழ், உலகம் முழுதும் பரவிட, இன்னொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.