ரமணா vs வில்லன் vs பகவதி: 2002 தீபாவளி ரேஸில் விஜயகாந்த் நாட்டிய வெற்றிக் கொடி!
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ தீபாவளி ரிலீஸ்கள் வந்திருந்தாலும், 2002 நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் ஏற்பட்ட கொண்டாட்டமும் பரபரப்பும் தனித்துவமானது. கேப்டன் விஜயகாந்த், விஜய், அஜித் குமார் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்கள் நேருக்கு நேர் மோதியதோடு, புதுமுக நாயகனாக களமிறங்கிய சிலம்பரசன் மற்றும் அழுத்தமான வாழ்வியல் கதையோடு வந்த சேரன் என 5 மாறுபட்ட படைப்புகள் ஒரே நாளில் திரைக்கு வந்து ரசிகர்களைத் திணறடித்தன.
அந்த சிறப்புமிக்க தீபாவளிப் போட்டியில் களம் கண்ட படங்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தின் விரிவான பார்வை இதோ
1. ரமணா
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் கூர்மையான திரைக்கதையில் விஜயகாந்த் நடிப்பில் உருவான ரமணா , தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத ஒரு புதிய கேப்டனை வெளிப்படுத்தியது. ஆஷிமா பல்லா கதாநாயகியாக நடிக்க, சிம்ரனின் உணர்வுப்பூர்வமான சிறப்புத் தோற்றம் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்தது.
வழக்கமான அதிரடி சண்டை, வசன பாணிகளைத் தவிர்த்து, அமைதியான ஆனால் அனல் பறக்கும் கல்லூரிப் பேராசிரியராக விஜயகாந்த் வாழ்ந்திருந்தார். ஏ.சி.எஃப் (ACF) அமைப்பின் மூலம் அரசு இயந்திரத்தின் ஊழல்களைத் துடைத்தெறியும் வியூகங்கள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளின. தனியார் மருத்துவமனையில் இறந்த உடலுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் பறிக்கும் போலித்தனத்தை புள்ளிவிவரங்களுடன் தோலுரிக்கும் காட்சி, இன்றும் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இளையராஜாவின் அழுத்தமான பின்னணி இசையும், அறிவுப்பூர்வமான வசனங்களும் படத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றன. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் சரிவிகிதத்தில் கலந்திருந்த இப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.
2. வில்லன்
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் குமார் இரு மாறுபட்ட தோற்றங்களில் மிரட்டிய திரைப்படம் வில்லன் . மீனா, கிரண் நாயகிகளாக நடிக்க, கருணாஸ் மற்றும் சுஜாதா முக்கியப் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்காக உதவும் புத்திசாலி சிவா, நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அப்பாவி மாற்றுத்திறனாளி விஷ்ணு என இரண்டு பாத்திரங்களிலும் அஜித் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, விஷ்ணு கதாபாத்திரத்தின் உடல்மொழி அஜித்தின் நடிப்புத்திறனுக்குப் பெரும் சான்றாக அமைந்தது. வித்யாசாகரின் இசையில் உருவான அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பின. வணிகரீதியான மசாலா, குடும்ப சென்டிமென்ட், விறுவிறுப்பான இயக்கம் என முழுமையான பண்டிகை விருந்தாக இப்படம் அமைந்தது.
3. பகவதி
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், ரீமா சென், ஜெய், ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் உருவான முழுநீள அதிரடித் திரைப்படம் பகவதி . டீக்கடை நடத்தும் சாமானிய அண்ணன், அரசியல்வாதியால் உயிரிழக்கும் தன் தம்பியின் ஆசையை நிறைவேற்றவும், அவனது குழந்தையைக் காப்பாற்றவும் எப்படி தாதாவாக உருவெடுக்கிறான் என்பதே கதை. விஜய் ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்ள இப்படம் அடிகோலியது. வடிவேலுவின் மறக்க முடியாத நகைச்சுவைக் கூட்டணி, தேவாவின் அதிரடிப் பாடல்கள் மற்றும் விஜய்யின் துடிப்பான சண்டைக் காட்சிகள் இளசுகளையும் வெகுஜன ரசிகர்களையும் பெரிதும் ஈர்த்தன.
4. காதல் அழிவதில்லை
டி. ராஜேந்தரின் இயக்கம், இசை மற்றும் தயாரிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களைக் கவர்ந்த சிலம்பரசன், கதாநாயகனாகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். இவருக்கு ஜோடியாக சார்மி கவுர் அறிமுகமானார்.
இளைஞர்களின் காதல், பெற்றோரின் எதிர்ப்பு மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவானது. டி.ஆரின் பிரத்யேக வரிகளில் உருவான பாடல்களும், சிம்புவின் தனித்துவமான நடன அசைவுகளும் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், கடுமையான போட்டி காரணமாக வணிகரீதியாகத் திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பதிவு செய்யத் தவறியது. எனினும், சிலம்பரசன் என்ற முன்னணி நட்சத்திரத்தின் வருகையை இப்படம் உறுதி செய்தது.
5. சொல்ல மறந்த கதை
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் புகழ்பெற்ற தலைகீழ் விகிதங்கள் நாவலை மையமாக வைத்து, இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய திரைப்படம் சொல்ல மறந்த கதை. சேரன் நாயகனாகவும், ரதி நாயகியாகவும் நடித்திருந்தனர். மாசாலா கலாச்சாரங்களுக்கு மத்தியில் தன்மானம், குடும்பச் சூழல், ஏழ்மை மற்றும் யதார்த்த கிராமத்து மனிதர்களின் வலிகளை அப்பட்டமாகப் பேசியது. வணிகரீதியான போட்டியைத் தாண்டி, விமர்சகர்களாலும் தீவிர சினிமா ரசிகர்களாலும் இத்திரைப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான உள்ளடக்கத்திற்கு ஒரு முக்கிய அடையாளமாக நின்றது.
ஐந்து படங்கள் ஒரே நாளில் மோதியதில், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மக்களின் தாக்கத்திலும் விஜயகாந்தின் ரமணா முதலிடத்தைப் பிடித்து பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. அஜித்தின் அபார நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் வசூலில் சளைக்காமல் போட்டி போட்ட வில்லன் இரண்டாம் இடத்தைப் பிடித்து வணிகரீதியான மெகா ஹிட் அந்தஸ்தைப் பெற்றது.

