1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

மீண்டும் செல்வராகவன், யுவன் கூட்டணி

செல்வராகவன்
துள்ளுவதோ இளமையில் ஆரம்பித்தது செல்வராகவன், யுவன் சங்கர் ராஜநட்பு. அதற்குப் பிறகு வெளிவந்த அனைத்துப் படங்களுக்கும் யுவன்தான் இசை. செல்வாவின் படங்களுக்கு இன்னொரு ப‌ரிமாணத்தை கொடுத்தன யுவனின் இசை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

இந்த இசைக் கூட்டணியில் பணப் பிரச்சனை அபஸ்வரத்தை கிளப்பியது யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து யுவனை அதிரடியாக நீக்கினார் செல்வா. அவர் இசையமைத்த இரு பாடல்களும் படத்திலிருந்தே நீக்கப்பட்டன. இனி இணையவே முடியாது என இருவரும் தனித்தனியே அறிக்கை வேறு விட்டனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் ஆடியோ வெளியீட்டு விழாவில் யுவனைப் பார்த்தவர்களுக்கு இனிய அதிர்ச்சி. மேடையிலேயே அமர வைத்திருந்தனர் யுவனை.

ஒன்றிணையமாட்டார்கள் என்று நிரைனத்தவர்கள் ஒரே மேடையில் தோன்றியதில் சில நல்ல உள்ளங்களுக்கு ஆனந்தத்தில் அழுகையே வந்துவிட்டது. செல்வாவின் அடுத்தப் படமான இது மாலை நேரத்து மயக்கத்துக்கும் ‌ஜி.வி. பிரகாஷ்குமாரே இசையமைக்கிறார். அதற்கு அடுத்தப் படத்தில் மீண்டும் செல்வா, யுவன் கூட்டணி இணையும் என்கிறார்கள் இந்த திடீர் சந்திப்பைப் பார்த்தவர்கள்.

விழாவின் ஹைலைட் தனுஷ், ஐஸ்வர்யா நடனம். இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவனில் ஒரு பாடல் பாடியுள்ளனர். இந்தப் பாடலை மேடையில் பாடியபடியே இருவரும் ஆட, அப்ளாஸ் அள்ளியது. முன்னதாக படத்தின் சிடியை ஷங்கர் வெளியிட பாக்யரா‌ஜ் பெற்றுக் கொண்டார்.

படத்தின் ஆடியயோ சிடி-யுடன் ஒரு ப‌ரிசு கூப்பனும் தருகிறார்கள். சிடி-‌யிலுள்ள பத்து பாடல்களில் ஆறு பாடல்கள் மட்டுமே படத்தில் இடம்பெறுகிறது. அந்தப் பாடல்கள் எவை என்பதை ச‌ரியாகக் கணித்துச் சொல்கிறவர்களுக்கு ப‌ரிசு.

என்ன ப‌ரிசு என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். பெற்றோருக்கு பென்சன், சகோதர, சகோத‌ரிக்கு திருமண உதவி, படிப்பு‌ச் செலவு, ஈழத் தமிழருக்கு நிவாரண உதவி, உறவினருக்கோ, உங்களுக்கோ மருத்துவ செலவு என ஐந்து சாய்ஸ்கள். எதை வேண்டுமானாலும் டிக் செய்யலாம். போட்டியிலும் வித்தியாசமாகவே சிந்தித்திருக்கிறார் செல்வராகவன்.