1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. கதைகள்
Written By Webdunia

ரிக்வேதரிஷி- வெங்கட் சாமிநாதன்

இன்றைக்கு 25 வருடங்களுக்கு முன் தன் 77 ஆம் வயதில் மறைந்த ந. பிச்சமூர்த்தியைப் பற்றி இன்று பேசும்பொழுது அவர் இன்றைய தலைமுறைக்கு ஓர் அந்நியப்பட்ட மனிதராகத் தோன்றுவார். அவர் எழுத்துக்களோ, வாழ்ந்த வாழ்வோ, வாழ்க்கை மதிப்பீடுகளோ, எல்லாமுமே நமக்கு அந்நியமானவை. ஏதோ கதையில் சித்திரிக்கப்படும் பாத்திரமாக அவர் தோற்றம் தரக்கூடும். இருப்பினும் அவர் ஒரு நிஜமனிதர். அவர் வாழ்ந்த வாழ்க்கையும், வாழ்ந்த முறையும் நிஜம். உண்மையில் அத்தகைய ஜீவனுக்கும், ஜீவிதத்திற்கும் ஒரு நீண்ட மரபு உண்டு. எல்லாத் துறையிலும் உண்டு.

காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை சிறுவயதில் ஒரு தத்தாரி, ஊருக்கும் உலகுக்கும் குடும்பத்துக்கும் உருப்படாத பிள்ளை. அவர் காலத்தில் புகழ்பெற்ற கோனேரி ராஜபுரம் வைத்திய நாதய்யர் போன்றோரிடம் சங்கீதம் பயின்றவர். கடைசியாக கற்க, பல்லவி பாடும் நுணுக்கங்களையெல்லாம் அதன் சிக்கலான தாளவிஸ்தாரங்களை கட்டமைப்புகளையெல்லாம் கற்கவேண்டி அவர் சரணடைந்து ஒரு பண்டாரத்திடம். அந்தப் பண்டாரத்தின் வீட்டுக்குப் போய் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் பண்டாரம் மனம் வந்து பாடும் நேரத்திற்காக காத்திருந்து கற்க செலவழித்தவை. அந்தப் பண்டாரத்திற்கும் நயினாப்பிள்ளையின் ஆர்வமும் ஆதரவும் பிடித்துப் போயிற்று. வழக்கம் போல் வேற்றூர் தேடித்திரியாமல் நயினாப்பிள்ளைக்குக் கற்றுக் கொடுக்கவே கோனேரிக்குப்பம் வீரட்டானேஸ்வரர் கோயிலிலேயே தங்கி பகல் பன்னிரண்டு மணி வாக்கில் பசி தீவிரமானால் ஊருக்குள் சென்று நாலு வீடுகள் முன் நின்று தன் ஒருவேளைத் தேவைக்கு கிடைத்த வெறும் சோற்றில் உப்புக் கலந்து கவளம் கவளமாக விழுங்கி பசியாறும் பண்டாரம் அவர். சாம்பார், ரசம் உதவாது. அவருக்கு வெறும் சோறும் உப்பும்தான். ஒருவேளை உணவுதான். இந்தப் பண்டாரத்தின் பல்லவி பாடக்கேட்ட பின், தான் முன் கற்ற வித்வான்களின் சங்கீதம் சங்கீதமா என்று கேட்கத் தோன்றிவிட்டது நயினாப்பிள்ளைக்கு. 4 1/2 வருடம் அப்படிக் கழிந்தது. தான் யாத்திரை போவதாகவும் பின்னர் வந்து மேலும் மிகுந்தவற்றை கற்றுக் கொடுப்பதாகவும் சொல்லிச் சென்ற பண்டாரம் பின்னர் காணப்படவே இல்லை. பண்டாரத்தின் மறைவோடு அவர் தந்திருக்கக் கூடும் கலையின் முழுமையும் மறைந்தது.

அந்தப் பண்டாரத்தின் ஊர் பேர் தெரியாது. அன்றும் தெரியாது. யாரும் கேட்கவில்லை. இன்றும் தெரியாது. மகா வைத்திய நாதசிவன் எப்படிப் பாடினார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் பற்றி, அவரது இசைப்பற்றி பேசியவர்கள் பதிவு நமக்குக் கிடைக்கிறது. ஆனால் பண்டாரத்தின் பெயரோ அவர் சங்கீதம் எத்தகையது என்பதோ, நமக்குத் தெரியாது. அவை வரலாற்றில் பதிவாகவில்லை. போன நூற்றாண்டின் ஏதோ ஒரு வருட காற்றோடு அது கலந்து போயிற்று. டெல்லியில் ஞiஅந டுடிஉயவைல-யில் தனக்கு பங்களாவும் பள்ளி நடத்த விஸ்தார மனையும் அரசு தராவிட்டால் நான் இந்தியாவைவிட்டு அமெரிக்கா போய்விடுவேன் என்று அரசாங்கத்துக்கு நிபந்தனைகள் விதிக்கும் மகாமகா சிதார் மேதை வாழும் காலம் இது. நமக்கு இந்த பல்லவி பாடும் பண்டார மேதைகள் புரிபட மாட்டார்கள். இருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை நோக்கு, காலம் காலமாக, இந்த பூமியில் இருந்து வந்துள்ளது. அந்த மரபு பெரும் கலைஞர்களையும் மேதைகளையும் நமக்குத் தந்துள்ளது. இந்த வாழ்க்கை மதிப்புகளும் மரபும்தான் வாழ்க்கையின் கலைகளின் ஜீவநாடி. மற்றவை இடையில் நினைவுறுத்திக் கொள்வது நல்லது. இன்றைய நமது நிர்பந்தங்கள் வேறாக, எப்படியோ இருக்கட்டும். ஆனால் காலம் காலமாக ஜீவித்து வந்திருந்த மரபுகளையும் மதிப்புகளையும் அவ்வப்போது நாம் நினைவுறுத்திக் கொள்வது சாத்தியமே.

1900-ல் பிறந்த ந. பிச்சமூர்த்தி தன் ஏழாவது வயதில் தந்தையை இழந்தவர். தன் மூத்த சகோதரரால் வளர்க்கப்பட்டவர். 1925 லோ என்னவோ கல்யாணம் ஆன திருக்கோலத்தோடு ரமண மகரிஷியிடம், `இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி?' என்று கேட்கிறார். பழம் தானாகக் கனியும் என்று சொல்லி அந்த இளைஞனைத் திருப்பி அனுப்பி விடுகிறார் ரமணர். ந. பிச்சமூர்த்தியின் குடும்பத்தில் தலைமுறைக்கொருவர் சன்னியாசி ஆகி வீட்டைத் துறப்பது ஒரு குடும்ப மரபாகவே தொடர்ந்து வந்துள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். இவருள்ளும் அத்தகைய ரத்த நாளங்கள் ஓடத்தான் செய்தன. ஆனால் அவர் யாரையும் அதோகதியாக்கிவிட்டு ஓடவில்லை. சந்நியாச மனநிலை தொடர்ந்தது. வாழ்வும் தொடர்ந்தது. அப்பா நடேச அய்யர் பல கலைகளில் வல்லவர். சிறந்த வித்வத் நிறைந்தவர். மராட்டி, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என பல பாஷைகள் அறிந்தவர். சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். நாடக நடிகர். தெரிந்த பாஷைகளில் எல்லாம் ஸாகித்யம் இயற்றத் தெரிந்தவர். இவ்வளவும் பிச்சமூர்த்தியிடம் வரும்போது - சங்கீதத்தில் இயல்பான பிடிப்பும், எழுத்தில் ஆர்வமுமாக உருமாறி விடுகிறது. ஆக, சந்தியாச மனநிலை சங்கீதம், இலக்கியம், தத்துவம் எழுத்து என இவ்வளவும் உருமாறி ந. பிச்சமூர்த்தியை அடைந்தன.



வாழ்க்கை தான் முக்கியம் என்கிறார் பிச்சமூர்த்தி. எந்த ஜீவனும் ஜீவிதமும் நிராகரிப்பதற்காக இல்லை. சந்நியாச மனம் ரத்தத்தில் ஓடுகிறதே! ஆமாம் அதுவும்தான். எல்லாம் நம் மரபில் இருந்தவை தான்.

எல்லா முரண்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்தி அமைதி காண்பதுதான் அந்த மரபு. தாமரை இலையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் அதன் பரப்பிற்குள் உருண்டோடும் நீரத்துளியும் முரண் என்றால் முரண்தான். ஒன்றியைந்தவை என்றால் ஒன்றியமைந்தவைதான். காட்டின் நடுவில் அமைந்த ஆஸ்ரமத்தில் தபஸ் இருந்து கொண்டே சீதையையும் லவகசனையும் சம்ரஷித்த ரிஷிகள் ராஜகுருவாக, மன்னனுக்கு ராஜநீதி உபதேசித்த முனிவர்கள், ராமனுக்கு யோக வாசிஷ்டம் உபதேசித்த வசிஷ்டர், அந்த மரபில் தோன்றியவர்கள். வால்மீகிக்கும் வியாசருக்கும் சந்நியாசமும் கவிதையும், காவ்யசிஷ்டியும் அந்நியப்பட்டவையோ, முரண்பட்டவையோ அல்ல. தபஸிகள்தான் ஆதி கவிகளும் கூட. ஆதிகவிகள் என்றால் என்ன மாதிரி கவிஞர்கள் அவர்கள்? உலகின் காவியச் சிகரங்களைப் படைத்தவர்கள் அவர்கள். இயற்கையையும் உயிரியக்கத்தின் ஆதார சக்திகளையும் பாடியவர்கள். கவிஞர்களாகவும் தத்துவ தரிசிகளாகவும் அதே சமயம் தபஸிகளாகவும் வாழ்ந்தவர்கள்.

ஒட்டாது விலகியும், கவலைப்பட்டு நிந்தித்தும், உலகோடு உறவு கொண்டவர்கள் `சித்தர்கள் மனத்திற்கும் ஆத்மாவிற்கும் மட்டுமல்ல'. உடலுக்கும் சிகிச்சை கற்றுத் தந்தவர்கள். அவர்களில் தோன்றும் இந்த முரண்களையும் காலம் காலமாக நாம் ஒன்றிணைத்தே எண்ணியும் பார்த்தும் வந்திருக்கிறோம். இன்றைக்கு இதன் நீட்சியை எங்கு காணவேண்டும்? பைத்தியமாக ஒழுக்கம் கெட்டவராக கிராமத்தாரால் துரத்தப்பட்ட சதாசிவ பிரம்மோந்திரரில் காணலாம். குடும்பமும் உஞ்சவிருத்தியும் ராமபக்தியும் சங்கீதமுமாக காலம் கழித்த தியாகய்யரிடம், நேற்று நம்மிடையே இருந்த பாபநாசம் சிவனிடம், உ.வே. சாமிநாதய்யர் நமக்கு அறிமுகப்படுத்திய அவரது ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம். அவர் ஏதும் கூரவiடிn குநநள கேட்டதாக, வாங்கியதாக செய்தியில்லை. மாணவர்களுக்கு படிப்பித்தது மட்டுமல்லாமல் சாப்பாடும் போட்டார். திருவாலடுதுறை மடம் அவரை சம்ரிக்ஷித்தது. இதற்குப் பிரதியாக அது கணக்கில் இல்லை. அவரவர் காரியத்தை அவரவர் செய்தார்கள். வாழ்க்கை ஓடியது.

அப்படித்தான் பிச்சமூர்த்தியும் கூட தன் வாழ்க்கையையும் எழுத்தையும் பார்த்தார். வக்கீலுக்குப் படித்து வக்கீல் ஆனார். பத்திரிகைகளில் உதவியாசிரியராக இருந்தது. கோயில் நிர்வாகியாக இருந்தார். நான்கு பெண்களுக்கு தந்தையானார். அவர்களுக்குத் திருமணம் நடந்தது எல்லாம்தான். கோயிலுக்குச் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் ஞானிகளையும் யோகிகளையும் தேடிச் செல்வார். எல்லாம்தான். வாழ்க்கை அப்படி ஒன்றும் சீரும் சிறப்புமாக இருந்தவை அல்ல. வாழ்க்கை, நிம்மதி அற்றுத்தான் வாழவேண்டி வந்தது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை. வாழ்க்கை நிம்மதி இன்மையால் வறுமையால், சோதனைகளாக இருந்த வாழ்க்கையை வெறுத்தவர் இல்லை. மனம் கசந்தவர் இல்லை. தலைமுறை தலைமறையாக குடும்பத்தில், அடியோட்டமாக ஓடும் சந்நியாச மனபாவம் அவருக்கு ஒரு நிச்சலன. அமைதி பாவத்தைக் கொடுத்திருக்க வேண்டும். வாழ்க்கையில் நாம் காணும் அத்தனை நிறபேதங்களும், குணபேதங்களும் அவர் எழுத்து நமக்குச் சித்திரித்துக் காட்டும் உலகில் உண்டு). அச்சித்திரிப்பிலே கோபமோ, துவேஷமோ, குற்றச்சாட்டோ, ஆச்சரியங்களோ, பொங்கும் சந்தோஷங்களோ காண முடியாது. அது ந. பிச்சமூர்த்தியாக முடியாது. இரண்டு பிச்சைக்காரர்களில் ஒருவன் மற்றவனைக் கண்டு பொறாமைப் பட்டு ஏமாற்ற, சுரண்ட நினைக்கிறான். இதுதான் உலக நடப்பு என்று பிச்சமூர்த்தி முன் வைக்கிறாரே அல்லாது யாரையும் நிந்திக்கவோ பாராட்டவோ சாடவோ இல்லை. இதெல்லாம் ஈஸ்வர லீலைகள் அல்லது இயற்கையின் நியதி என்று கூறி நிற்கும் மனோபாவம், ராவண வதத்திற்குப் பிறகு, ராமர் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்று ஆகாய மார்க்கமாக அயோத்திக்குச் செல்கிறார். அப்போது வழியெல்லாம் கீழே பூமியில் காணும் பல்வேறு காட்சிகளை சீதைக்குக் காட்டி, "இப்படியெல்லாம் தான் இருக்கும் உலகம்" என்று சொல்வதாக ஒரு கட்டம் சொல்லப்படுகிறது. அந்த ராமர் நிந்திக்கும் அல்லது சந்தோஷத்திற்கும் இராமர் இல்லை. எட்டி இரந்து தன் விரல் நகத்தைக் கடிக்கும் கடவுள். ஜேம்ஸ் ஜாய்ஸின் கடவுள். ழந ளை யீயiபே hளை iபேநச யேடைள ஜாய்ஸின் வார்த்தைகளில்.

ரிக்வேதரிஷி
- வெங்கட் சாமிநாதன

அந்த அமைதி, தர்மம் மீறிய அமைதி அல்ல. மனித சமுதாயத்தின் மீது அக்கறை ஏதும் அற்று நிற்கும் அமைதி அல்ல. மனிதாபிமானம் நிறைந்து வழிவதாக சொல்லிக் கொள்ளும் சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் வாதிகள், சித்தாந்திகள், கவிகள் தம் வாய்ப்பாட்டை மீறிய வாழ்க்கையைக் காண மறுப்பவர்கள், அதுபற்றி தம் வாய் திறக்கமாட்டார்கள். ஒரு பிச்சைக்காரனை இன்னொரு பிச்சைக்காரனை சுரண்டுவான் என்பது அவர்கள் வாய்ப்பாட்டில் இல்லாதது. ஆனால் அது வாழ்க்கையின் நிதர்ஸனம். அசுரத்தனமாக வீசும் சூறைக்காற்று ஒருவனுக்கு பராசக்தியின் தாண்டவமாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மற்றவன் `கம்மனாட்டி' என்று தெய்வத்தை நிந்திக்கிறான்.

இவரையும் புன்னகையோடு நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ந. பிச்சமூர்த்தி.

சந்நியாசிதான். மனத்தளவில் வாழ்க்கைதான் முக்கியம் என்றார். அந்த வாழ்க்கையையும் எதற்காவது அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றார். அவர் எழுத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அர்ப்பணித்துக் கொண்டார். அர்ப்பணித்துக் கொண்டதற்கு விலை ஏது? பேரம் ஏது? எதிர்ப்பு ஏது? அந்த எழுத்தில் நாம் காண்பது வாழ்க்கையும் அதன் அனந்த கோடி லீலா விநோதங்களையும் இதை சைடிலே என்பார்கள்.

`இது கல்யாண முருங்கை இல்லை. பார்க்க அப்படித்தான் தோன்றும்' என்று எதிர்ப்பட்டவர்களையெல்லாம் விசாரித்து கடைசியில் ஒரு கிராமத்துப் பெண் அது `பாஞ்சாலிப் பூ' என்கிறாள். பிச்சமூர்த்திக்கு சந்தோஷம் பிடிபடுவதில்லை. `டேய் அது பாஞ்சாலிப் பூடா' என்று கூவிக்கொண்டே வருகிறார். அவர் எழுத்தில் காணும் பூ, மரங்கள், செடி வகைகள், விலங்குகள் அவற்றின் விசித்திர குணங்கள் நம் சாதாரண வாழ்க்கையில் நமக்குத் தெரியவராதவை. இதற்கென்று மெனக்கெட்டு விவரங்களைத் தேடி அலைந்தால்தான் தெரியவரும் அல்லது கூரிய பார்வை இருக்க வேண்டும். இவற்றைக் காண்பதில் அறிவதில் ஓர் குழந்தையின் ஆச்சரிய விழிகளும் சந்தோஷமுகமும் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும். அவர் எழுத்துக்களில் இவை எல்லாமே அள்ளித் தெளித்திருக்கும். போகிற போக்கில் சொல்லிச் செல்லும் தகவல்களாக, சொல்ல வந்த விஷயத்திற்கு காட்சிக்கு உரம் சேர்ப்பவையாக இருக்கும். நம் பாட்டிகளின் பேச்சில் பழமொழிகள் உதிர்வது போன்ற ஓர் சாதாரணத்வம், இயல்பான பாவம் அவர் வர்ணனைகளில், குணச்சித்திரத்தில் வாழ்க்கையின் நுணுக்க விவரங்களில் தெரியவரும்.

ந. பிச்சமூர்த்தி தன் வயதின் எழுபதுகளில் சாலியமங்கலம் என்ற ஓர் ஒதுங்கிய தஞ்சைக் கிராமத்தில் இருந்தபோது கொட்டும் மழையில் நனைந்து கொண்டே காவிரியோரம் முக்குளித்தான் என்ற பறவையைக் கண்டு சிறு பையனைப் போல சந்தோஷப்பட்டு தனக்குக் காட்டியது பற்றி பிரகாஷ் எழுதியிருக்கிறார். (கணையாழி, டிசம்பர் 1999) இந்தக் காட்சியை மனத்தில் திரையோட விட்டுப் பார்த்தால் நதிகளையும் மலைகளையும் விருக்ஷங்களையும் பாடிய ரிக்வேத ரிஷி ஒருவர் நம்முன் காட்சி அளிப்பார்.

நன்றி : ந. பிச்சமூர்த்தி நினைவாக (கட்டுரைகள், தொகுதி - 1)
தொகுப்பு : வெங்கட் சாமிநாதன்,
மதிநிலையம்.
(15.8.2000 ம் அன்று கொண்டாடப்பட்ட ந. பிச்சமூர்த்தியின் நூற்றாண்டுவிழாவில் படிக்கப்பட்ட கட்டுரை)