நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்-உம்பர்த்தோ ஈகோ

Webdunia|
நன்றி : காலச்சுவடு ஜன - மார்ச் 2000

1918 ல் என்னுடைய அம்மா வழி தாத்தா தன்னுடைய நாற்பதாவது வயதில் ஸ்பானிஷ் காய்ச்சல் என்று பரவலாக அழைக்கப்பட்ட ஒருவகை நச்சுக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். ஐரோப்பாவின் பெரும் பகுதியை அந்நோய் அப்போது கொன்றழித்துக் கொண்டிருந்தது. மூன்று மருத்துவர்களின் மிகச்சிறந்த சிகிச்சையையும் மீறி அவர் ஒரு வாரத்திற்குள் இறந்துவிட்டார். 1972 ல் என்னுடைய நாற்பதாவது வயதில் ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு ஒப்பானதாகக் தோன்றிய ஒரு வகை நோயால் நான் பீடிக்கப்பட்டேன். பெனிசிலின் காரணமாக ஒரே வாரத்தில் நான் எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டேன். அணுசக்தி, விண்வெளிப் பயணம், மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை மறந்துவிட்டு, நம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக பெனிசிலினை நான் ஏன் விடாப்பிடியாகக் கருதுகிறேன் என்பதை இதனால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். (மேலும் கடந்த காலத்தில் ஐம்பது அல்லது அறுபது வயதில் இறந்து போயிருக்கக் கூடிய மனிதர்களை இன்று எண்பது வயதை அடைய வைக்கக் கூடிய எல்லா மருந்துகளையும் இதில் நான் பொதுவாகச் சேர்த்துக் கொள்கிறேன்.)
ஒரு நூற்றாண்டின் மிக முக்கியமான தொழில்நுட்ப கண்டுபிடிப்பையோ அல்லது விஞ்ஞானக் கண்டுபிடிப்பையோ தீர்மானிப்பது மிகக் கடினம். ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பின் தேதியைக் குறித்த நம்முடைய கருத்துக்கள் தெளிவாக இல்லாமையே இதற்குக் காரணம். இந்த நூற்றாண்டின் அதிசுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளாக பல பொருட்களை வாசகர்கள் பட்டியலிடக்கூடும். ஆனால் உண்மையில் அவை நம்முடையதுக்கும் முந்தைய நூற்றாண்டிலிருந்து தொடங்குபவை. உதாரணமாக, தானியங்கி, விண் முட்டும் கட்டடம், சுரங்க நடைபாதை, டைனமோ டர்பைன் போன்றவை. தட்டச்சுப் பொறி, கிராமஃபோன், ஒலிப்பதிவுப் பொறி, தையல் எந்திரம், குளிர்பதனப் பெட்டி அகியவற்றோடு டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள், சுத்தீகரிக்கப்பட்ட பால், சிகரெட் லைட்டர் (சிகரெட்டையும் சேர்த்து) நகரும் படிக்கட்டு, சலவை எந்திரம், அழிப்பான், மையொற்றும் தாள், மின் விசிறி, பாதுகாப்பான சவரக்கத்தி, மாஃபி கட்டில்1, முடிதிருத்துபவரின் நாற்காலி, பாதுகாப்பான தீக்குச்சி, மழை அங்கி, சேஃப்டி பின், காற்றூட்டப்பட்ட பானங்கள், காற்றடைத்த டயர்கள் மற்றும் கியர்கள் கொண்ட சைக்கிள்கள், மின்சார ட்ராம், செயற்கை நூலிழைகள், இவையெல்லாவற்றையும் விற்கும் பல்பொருள் அங்காடி - இன்னும் பட்டியலை நான் தொடர வேண்டுமானால் பின் வருவனவற்iயும் சேர்த்துக் கொள்ளலாம். மின்விளக்கு, தொலைபேசி, தந்தி, ரேடியோ, புகைப்படக் கலை மற்றும் சலனப் படங்கள், மேலும் ஒரு நிமிடத்தில் எண்ணற்ற கூட்டல்களைப் போடும் திறமை வாய்ந்ததும், கம்ப்யூட்டருக்கு இட்டுச் சென்ற பாதையில் நம்மை இருத்தியதுமான ஒரு கணக்குப்போடும் எந்திரத்தை பேபேஜ் கண்டுபிடித்தார்.
பல நூறு ஆண்டுகளைக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கும் போது கணக்கிடுதல் மேலும் கடினமாகிறது. வெடிமருந்து மற்றும் திசைகாட்டும் கருவி ஆகியவற்றின் தோற்றத்தைக் கணக்கிட கட்டுக்கதைகளையே நாம் நம்ப வேண்டியுள்ளது. உதாரணமாக, பன்னிரண்டாம் நூற்றாண்டு ஓவியம் ஒன்றில் ஒரு கருவி சித்தரிக்கப்பட்டிருந்தால் அது அந்நூற்றாண்டில் இருந்திருக்க வேண்டும் என்று நாம் உறுதியாக நம்ப முடிந்தாலும்கூட, அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் அக்கருவி இருந்திருக்கவில்லை என்று நம்மால் உறுதியாகச் சொல்லமுடியாது. இந்தப் பிரச்சனைகளை நான் எழுப்புவதற்குக் காரணம், நம்முடைய இந்த ஆயிரம் ஆண்டுக்காலத்தின் துவக்கத்தில் தோன்றிய சில கண்டுபிடிப்புகளைக் குறித்து நான் பிரஸ்தாபிக்க விரும்புவது தான். அக்கண்டுபிடிப்புகளில் சில யாருடைய கவனிப்பையும் பெறாமலேயே முந்தைய ஆயிரம் ஆண்டுக் காலத்தின் கடைசி இரண்டு நூற்றாண்டுகளில் தயக்கத்துடன் தோன்றியிருப்பதற்கும் வாய்ப்புண்டு. எப்படி இருந்தாலும், கடந்த ஆயிரம் ஆண்டுகளை மாற்றியவை இந்தக் கண்டுபிடிப்புக்கள்தான்.
நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம

-உம்பர்த்தோ ஈக

ஆயிரமாவது ஆண்டிற்குப் பிறகு வந்த முதல் நூற்றாண்டுகளில் சந்தேகத்திற்கே இடமில்லாத வகையில் உண்டான கண்டுபிடிப்புகளைப் பற்றி நான் பேச வேண்டியிருந்ததால் கப்பல் அல்லது படகின் பின்புறம் பொருந்தப்படும் சுக்கானைக் குறிப்பிடுவது என்னுடைய உடனடி ஆர்வமாக இருக்கும். ஆயவாடைனந என்ற அரசியின் கதை அல்லது க்ஷயலநரஒ கூயயீநளவசல2 (க்ஷயலநரஒ என்ற நகரத்தில் அதன் பிரதி பாதுகாக்கப்பட்டதால்) என்று அழைக்கப்படும் வரலாற்றின் அதி பிரபலமான சித்திரக்கதையைப் பாருங்கள். ஹேஸ்டிங்ஸ் என்ற இடத்தில் நடந்த யுத்தம் உள்ளிட்டு நார்மானியர்கள் இங்கிலாந்தில் வந்திறங்கியதைத் துல்லியமாக இக்கதை விவரிக்கிறது. இங்கிலாந்தை வென்றவனான நார் மண்டியின் வில்லியம் என்பவனின் துருப்புக்கள், ஸ்காண்டி நேவிய கடற் கொள்ளைக்காரர்கள் பயன்படுத்திய படகுவகையில் இங்கிலாந்தில் வந்திறங்கியதையும், அவற்றில் சுக்கானுக்குப் பதிலாக படகுகளில் பின்புறப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஒரு துடுப்பையும் அந்த சித்திரக் கதைகளில் நீங்கள் பார்க்கலாம். (உண்மையில், இக்கப்பல்கள் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு துடுப்புக்கள் கொண்டவை). 1066 வரை நாவாய்கள் இப்படித்தான் இயக்கப்பட்டன. ஆனால் இந்த பக்கவாட்டு சுக்கான்களைக் கொண்டு காற்றின் வலிமைக்கு ஈடுகொடுத்து கப்பலைச் செலுத்துவது சிரம சாத்தியமாக இருந்தது. கடல் கொந்தளிப்பின்போது அது மேலும் கடினமாக இருந்திருக்கும்.
பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் நவீன சுக்கான் மேம்படுத்தப்பட்டது. ஒரு கதவைப்போல கீல் மூலம் கப்பலின் பின்புறத்தில் பொருத்தப்பட்டு தண்ணீர்ப் பரப்புக்கு சற்று கீழே நகரும் அதை, கப்பல் தளத்தின் மேலுள்ள ஒரு தனி ஆள் ஒரு கைப்பிடி மூலம் இயக்கிவிட முடிந்தது. வழக்கம் போலவே இங்கும் தேதிகள் தெளிவாக இல்லை. ஆனால் கீல் மூலம் பொருத்தப்பட்ட சுக்கானுக்கும், கப்பலின் பின் புறத்தில் பொருத்தப்பட்ட துடுப்புக்கும் இடையிலான ஒன்று வின்செஸ்டர் தலைமைத் திருக்கோயிலில் உள்ள ஒரு புடைப்போவியத்தில் காணப்படுகிறது. க்ஷயலநரஒ கூயயீநளவசல க்குப் பின் வெறும் நூறு ஆண்டுகள் கழித்து 1180 ல் அது தொடங்குகிறது.
ஏன் இந்த சுக்கானுக்கு இத்தனை முக்கியத்துவம்? இந்தக் கண்டுபிடிப்பு நடந்திருக்காவிட்டால் கொலம்பஸ் அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருக்க முடியாது. இந்த ஆயிரம் ஆண்டுகளின் மீதி வரலாறும் வேறு மாதிரியாக ஆகியிருக்கலாம். இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு தனித்தன்மை அளித்தவை என்ற அளவில் அல்லாது இக்காலப் பிரிவின் முடிவை நாம் கொண்டாட உதவி புரிந்தது என்ற முறையில் ஒரு கண்டுபிடிப்புத் தொடரைப் பற்றி நான் விவாதிக்க விரும்புகிறேன். இக்கண்டுபிடிப்புக்கள் இல்லாவிட்டால் ஒருவேளை நாம் பிறந்திருக்கவே மாட்டோம்.


இதில் மேலும் படிக்கவும் :