ரிக்வேதரிஷி- வெங்கட் சாமிநாதன்

Webdunia|
இன்றைக்கு 25 வருடங்களுக்கு முன் தன் 77 ஆம் வயதில் மறைந்த ந. பிச்சமூர்த்தியைப் பற்றி இன்று பேசும்பொழுது அவர் இன்றைய தலைமுறைக்கு ஓர் அந்நியப்பட்ட மனிதராகத் தோன்றுவார். அவர் எழுத்துக்களோ, வாழ்ந்த வாழ்வோ, வாழ்க்கை மதிப்பீடுகளோ, எல்லாமுமே நமக்கு அந்நியமானவை. ஏதோ கதையில் சித்திரிக்கப்படும் பாத்திரமாக அவர் தோற்றம் தரக்கூடும். இருப்பினும் அவர் ஒரு நிஜமனிதர். அவர் வாழ்ந்த வாழ்க்கையும், வாழ்ந்த முறையும் நிஜம். உண்மையில் அத்தகைய ஜீவனுக்கும், ஜீவிதத்திற்கும் ஒரு நீண்ட மரபு உண்டு. எல்லாத் துறையிலும் உண்டு.

காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை சிறுவயதில் ஒரு தத்தாரி, ஊருக்கும் உலகுக்கும் குடும்பத்துக்கும் உருப்படாத பிள்ளை. அவர் காலத்தில் புகழ்பெற்ற கோனேரி ராஜபுரம் வைத்திய நாதய்யர் போன்றோரிடம் சங்கீதம் பயின்றவர். கடைசியாக கற்க, பல்லவி பாடும் நுணுக்கங்களையெல்லாம் அதன் சிக்கலான தாளவிஸ்தாரங்களை கட்டமைப்புகளையெல்லாம் கற்கவேண்டி அவர் சரணடைந்து ஒரு பண்டாரத்திடம். அந்தப் பண்டாரத்தின் வீட்டுக்குப் போய் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் பண்டாரம் மனம் வந்து பாடும் நேரத்திற்காக காத்திருந்து கற்க செலவழித்தவை. அந்தப் பண்டாரத்திற்கும் நயினாப்பிள்ளையின் ஆர்வமும் ஆதரவும் பிடித்துப் போயிற்று. வழக்கம் போல் வேற்றூர் தேடித்திரியாமல் நயினாப்பிள்ளைக்குக் கற்றுக் கொடுக்கவே கோனேரிக்குப்பம் வீரட்டானேஸ்வரர் கோயிலிலேயே தங்கி பகல் பன்னிரண்டு மணி வாக்கில் பசி தீவிரமானால் ஊருக்குள் சென்று நாலு வீடுகள் முன் நின்று தன் ஒருவேளைத் தேவைக்கு கிடைத்த வெறும் சோற்றில் உப்புக் கலந்து கவளம் கவளமாக விழுங்கி பசியாறும் பண்டாரம் அவர். சாம்பார், ரசம் உதவாது. அவருக்கு வெறும் சோறும் உப்பும்தான். ஒருவேளை உணவுதான். இந்தப் பண்டாரத்தின் பல்லவி பாடக்கேட்ட பின், தான் முன் கற்ற வித்வான்களின் சங்கீதம் சங்கீதமா என்று கேட்கத் தோன்றிவிட்டது நயினாப்பிள்ளைக்கு. 4 1/2 வருடம் அப்படிக் கழிந்தது. தான் யாத்திரை போவதாகவும் பின்னர் வந்து மேலும் மிகுந்தவற்றை கற்றுக் கொடுப்பதாகவும் சொல்லிச் சென்ற பண்டாரம் பின்னர் காணப்படவே இல்லை. பண்டாரத்தின் மறைவோடு அவர் தந்திருக்கக் கூடும் கலையின் முழுமையும் மறைந்தது.
அந்தப் பண்டாரத்தின் ஊர் பேர் தெரியாது. அன்றும் தெரியாது. யாரும் கேட்கவில்லை. இன்றும் தெரியாது. மகா வைத்திய நாதசிவன் எப்படிப் பாடினார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் பற்றி, அவரது இசைப்பற்றி பேசியவர்கள் பதிவு நமக்குக் கிடைக்கிறது. ஆனால் பண்டாரத்தின் பெயரோ அவர் சங்கீதம் எத்தகையது என்பதோ, நமக்குத் தெரியாது. அவை வரலாற்றில் பதிவாகவில்லை. போன நூற்றாண்டின் ஏதோ ஒரு வருட காற்றோடு அது கலந்து போயிற்று. டெல்லியில் ஞiஅந டுடிஉயவைல-யில் தனக்கு பங்களாவும் பள்ளி நடத்த விஸ்தார மனையும் அரசு தராவிட்டால் நான் இந்தியாவைவிட்டு அமெரிக்கா போய்விடுவேன் என்று அரசாங்கத்துக்கு நிபந்தனைகள் விதிக்கும் மகாமகா சிதார் மேதை வாழும் காலம் இது. நமக்கு இந்த பல்லவி பாடும் பண்டார மேதைகள் புரிபட மாட்டார்கள். இருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை நோக்கு, காலம் காலமாக, இந்த பூமியில் இருந்து வந்துள்ளது. அந்த மரபு பெரும் கலைஞர்களையும் மேதைகளையும் நமக்குத் தந்துள்ளது. இந்த வாழ்க்கை மதிப்புகளும் மரபும்தான் வாழ்க்கையின் கலைகளின் ஜீவநாடி. மற்றவை இடையில் நினைவுறுத்திக் கொள்வது நல்லது. இன்றைய நமது நிர்பந்தங்கள் வேறாக, எப்படியோ இருக்கட்டும். ஆனால் காலம் காலமாக ஜீவித்து வந்திருந்த மரபுகளையும் மதிப்புகளையும் அவ்வப்போது நாம் நினைவுறுத்திக் கொள்வது சாத்தியமே.
1900-ல் பிறந்த ந. பிச்சமூர்த்தி தன் ஏழாவது வயதில் தந்தையை இழந்தவர். தன் மூத்த சகோதரரால் வளர்க்கப்பட்டவர். 1925 லோ என்னவோ கல்யாணம் ஆன திருக்கோலத்தோடு ரமண மகரிஷியிடம், `இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி?' என்று கேட்கிறார். பழம் தானாகக் கனியும் என்று சொல்லி அந்த இளைஞனைத் திருப்பி அனுப்பி விடுகிறார் ரமணர். ந. பிச்சமூர்த்தியின் குடும்பத்தில் தலைமுறைக்கொருவர் சன்னியாசி ஆகி வீட்டைத் துறப்பது ஒரு குடும்ப மரபாகவே தொடர்ந்து வந்துள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். இவருள்ளும் அத்தகைய ரத்த நாளங்கள் ஓடத்தான் செய்தன. ஆனால் அவர் யாரையும் அதோகதியாக்கிவிட்டு ஓடவில்லை. சந்நியாச மனநிலை தொடர்ந்தது. வாழ்வும் தொடர்ந்தது. அப்பா நடேச அய்யர் பல கலைகளில் வல்லவர். சிறந்த வித்வத் நிறைந்தவர். மராட்டி, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என பல பாஷைகள் அறிந்தவர். சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். நாடக நடிகர். தெரிந்த பாஷைகளில் எல்லாம் ஸாகித்யம் இயற்றத் தெரிந்தவர். இவ்வளவும் பிச்சமூர்த்தியிடம் வரும்போது - சங்கீதத்தில் இயல்பான பிடிப்பும், எழுத்தில் ஆர்வமுமாக உருமாறி விடுகிறது. ஆக, சந்தியாச மனநிலை சங்கீதம், இலக்கியம், தத்துவம் எழுத்து என இவ்வளவும் உருமாறி ந. பிச்சமூர்த்தியை அடைந்தன.இதில் மேலும் படிக்கவும் :