ஏழு பேர்

ஆர். ராஜகோபாலன்

Webdunia|
அங்கே மொத்தம் 7 பேர் இருந்தார்கள், அவர்களில் பெரியவனாகத் தெரிந்த ஒரே ஒரு பையன் மட்டுமே கால்சிராயும் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவர்களில் சிலர் ஒன்று மேலேயோ அல்லது கீழேயோ மட்டுமே அணிந்திருந்தார்கள். இரு பொடியன்கள் ஒன்றுமே இல்லாது இருந்தார்கள். ஒரு சிறுமி கூட கிழிந்த பாவாடை ஒன்றையே இடுப்பு வரை கட்டியிருந்தாள். அவள் மடியிலிருந்து குழந்தை வாயில் விரலைப் போட்டுக் கொண்டு அவள் மார்பில் தலையைச் சாய்த்துக் கொண்டிருந்தது.

இவன் உட்கார்ந்திருந்த திண்ணைக்கு நான்கு வீடுகளுக்கு அப்பால் அவர்கள் இப்போது வந்திருந்தார்கள். நன்றாகவும் தெளிவாவகும் அவர்கள் செய்கை இவனுக்குத் தெரிந்தது.

கீழே கிடந்த அறுந்த மாலையை அவர்களில் ஒருவனுக்குப் போட்டுக் கைதட்டி பெருஞ்சத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பையன் நழுவி விழும் கால் சிராயை ஒரு கையில் பிடித்துக் கொண்டே கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான்.
அவர்களுக்குச் சுற்றுபுற பிரக்ஞையே இல்லாதது போல இவனுக்குப் பட்டது. பொழுது போகாமல் வெளியே உட்கார்ந்திருந்த இவனுக்கு அது மிகுந்த வேடிக்கைக்குரியதாகவும் மகிழ்ச்சியளிப்பதாயும் கூட இருந்தது. ஒரு அயலானின் பார்வையுடனேயும் கலைக் கண்களுடனேயும் தான் அதைக் கண்டுகளிப்பதாக நினைத்துக் கொண்டான்.

அவர்கள் இப்போது இவனுக்கு எதிரில் சாலையோரமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்த கைவண்டியிடம் நெருங்கி வந்தார்கள். அதே சிறுவனுக்கு மறுபடியும் மாலை போட்டுக் குதித்துக் குதித்துக் கூச்சல் போட்டார்கள், சட்டை போடாமல் பரட்டைத் தலையுடனிருந்த அந்தச் சிறுவன் கைகளைக் கூப்பி மிகுந்த கம்பீரத்துடன் தலையை அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் அசைத்துக் கொண்டிருந்தான். கைவண்டியை இவனுக்கு மிக அருகில் கொண்டு வந்து "வாழ்க வாழ்க" என்று அவர்கள் கோஷம் செய்தார்கள்.
இவனுக்குத் திடீரென்று தானும் அவர்களில் ஒருவனாகி விட்டதைப் போலவும் தானும் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் போலவும் ஒருவித பயம் ஏற்பட்டது. உடம்பை சிலிர்த்துக் கொண்டு தான் ஒரு பி.எஸ்.சி. என்பதையும் அன்று தான் லாண்டரியிலிருந்து வாங்கிவந்த வேஷ்டியையும் பனியனையும் போட்டுக் கொண்டிருப்பதையும் நினைத்துக் கொண்டான். எழுந்து நின்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு போங்கடா போங்க என்று கைகளை ஆட்டி சத்தம் செய்தான்.
இப்போது மாலையினுடனிருந்த பையன் மாலையை எடுத்து இவன்மேல் படும்படியாக வீசிப் போட்டான். இவன் நகர்ந்து நின்று கொண்டு மிகுந்த கோபத்துடனும் அருவருப்புடனும் மாலையை கையில் எடுத்தபோது அவர்களில் பெரியவனாக இருந்த பையன் "சாவு மாலை" "சாவு மாலை" என்று கத்தினான். எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு "வாழ்க" என்பதற்குப் பதில் இப்போது "ஒழிக ஒழிக" என்று பெருங்கூச்சல் எழுப்பினார்கள்.வாயில் விரல் போட்டுக் கொண்டிருந்த குழந்தை தலையைத் தூக்கி இவனை ஒருநிமிடம் பார்த்துவிட்டு மீண்டும் தலையை சாய்த்துக் கொண்டது.
"சாவு மாலையென்றால் நீங்கள் ஏனடா தொடுகிறீர்கள்?" என்று அவர்களுக்கு மேல் கத்திக் கேட்கவேண்டும் போல் இவனுக்குத் தோன்றியது. திடீரென்று தன்னுடைய நிலையிலிருந்து கீழே விழுந்து விட்டதைப் போன்று உணர்ந்தான். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று மிகுந்த வெட்கத்துடன் தலையை லேசாகத் தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குத் தெரிந்தவர்கள் அங்கே யாரும் இல்லை.
சிறுவர்கள் கைவண்டியை விட்டு விட்டு சிறிது தூரத்தில் நின்று கொண்டு இன்னும் பெரியதாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை அலட்சியம் செய்வது போல் இவன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தும், அவர்கள் தொடர்ந்து சத்தம் செய்து கொண்டிருந்தனர். திடீரென்று முகமெல்லாம் வேர்ப்பது போலவும், கை கால்கள் நடுங்குவதைப் போலவும் உணர்ந்தான். ஏதோ ஒரு முக்கியமான வேலையை மறந்து விட்டிருந்து இப்போதுதான் ஞாபகம் வந்தது போல் வீட்டிற்குள் ஓடினான். அன்றுதான் இவன் நீண்ட நேரம் இடைவிடாது ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தான். சமீப காலத்தில் வானொலி நிகழ்ச்சிகள் மிகுந்த முன்னேற்றம் அடைந்திருப்பதாயும், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதாயும் கூட இவனுக்கு அன்று தோன்றியது.--------------------------------------

நன்றி: இயந்திர மாலை
சிறுகதைத் தொகுதி (முதல் பதிப்பு 1999)
ஆசிரியர்: ஆர். ராஜகோபாலன்
மதிநிலையம்


இதில் மேலும் படிக்கவும் :