இல்லை

பேயோன்

Webdunia|
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்: பிரச்சனை அது இல்லை. இல்லை என்பதுதான் பிரச்னை.

நீங்கள் கடந்த காலத்தில் எனக்கு செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப்போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில் `இல்லை'தான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருந்தவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பதில்: என்னடா இவன் நன்றி கெட்டவனாக இருக்கிறானே என்று நினைப்பதற்கு முன் நீங்கள் எனக்கு இத்தனை தீமைகள் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நினைவில் எதுவும் அகப்படவில்லை என்னிடம் கேளுங்கள்.
உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவன் ஒரு தடவை இல்லை என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் என்று என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இல்லை என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் இல்லைதான்.

நீங்கள் யார், நான் யார் என்று யோசித்துப் பாருங்கள். நம்மைப் போல் இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் உலகம் தாங்குமா? மூன்றாவது உலக நாடுகள் இதுவரை பட்டது போதாதா? நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா? உங்களோடு என்னைப் பார்த்தால் எனக்கு அசிங்கம். என்னோடு உங்களைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கம்.
இல்லை என்று சொல்வதால் நான் உங்களை வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. மனதிற்குள் சபித்துக்கொண்டு கொடுப்பதை விட இல்லை என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள், குடி போதையிலாவது குடித்திருக்கும்போது நீங்கள் எல்லாரும் மனிதருள் மாணிக்கங்கள் என்று எனக்குத் தெரியும். நான் அவ்வளவு மோசம் இல்லை. நான் அதுவரை போவதில்லை. என் எல்லை எனக்கத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் இல்லை நான்.
உங்கள் தேவையைத் தற்காலிகமாக மறந்துவிட்டு இல்லை என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவு செய்து மறக்காதீர்கள்.

இல்லாதவன், இருப்பின் இன்மை என்கிற ஓல் பஜனை எல்லாம் என்னிடம் வேண்டாம். நான் என்ன சொன்னேன்? `இல்லை' என்றுதானே சொன்னேன்? அதற்குப் பிறகு எப்படி இல்லாதவன் பற்றியும் இருப்பின் இன்மை பற்றியும் பேச்சு வர முடியும்? இல்லை என்று சொன்னால் புரிந்துகொள்ள மண்டையில் மசாலா இல்லாதவர்கள் கேட்கவே தகுதி இல்லாதவர்கள். அவர்களுக்கு இல்லை என்ற பதிலே அதிகம். அவர்களிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அருப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு `சுயத்தின் எச்சங்கள்' என்பது போன்றதொரு தலைப்பு வைக்கலாம். கேட்டவர்கள் மனம் நிறைந்து போகட்டும்.


இதில் மேலும் படிக்கவும் :