வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 3 ஜூன் 2015 (12:55 IST)

இப்போதான் ஒரு படத்தை வெளியிடுற கஷ்டமும் வலியும் தெரியுது - சந்தானம் பேட்டி

இனிமே இப்படித்தான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. நடிக்கிற படங்களின் எந்த விழாவுக்கும் வராதவர் தயாரித்து, நடித்து, வெளியிடும் படம் என்பதால் வந்திருந்தார். அவருக்குப் பதில் இன்னொருவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வர முடியாதே.
 
வழக்கமான கேள்விகள் வழக்கமான பதில்கள்.
படத்தயாரிப்பு எப்படி இருக்கிறது?
 
இப்போ இருக்கிற சூழ்நிலையில் ஒரு படத்தை எடுக்கிறது ஈஸி. ஆனால், அந்தப் படத்தை ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு இப்போ தெரிஞ்சுகிட்டேன்.
 
இதற்கு முன்னாலும் படம் தயாரித்திருக்கிறீர்களே?
 
இதுக்கு முன்னால கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பண்ணுனேன். அதுல நான் லைன் புரொடியூசர். ராம.நாராயணன் சார்தான் புரொடியூசர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திலும் நான் லைன் புரொடியூசர், பிவிபி சினிமாதான் புரொடியூசர். படத்தை எடுத்து கொடுத்திடுவேன். அதற்கப்புறம் ரிலீஸ் பண்றதெல்லாம் புரொடியூசரோட வேலை. முதல்முறையா இப்போதான், என்னோட ஹேண்ட் மேட் சார்பா தயாரிக்கிற படத்தை நானே ரிலீஸ் பண்றேன். இப்போதான் ஒரு படத்தை வெளியிடுற கஷ்டமும் வலியும் தெரியுது.
 
அப்படியென்ன கஷ்டங்கள்?
 
தேதி பிடிக்கிறதிலிருந்து டைட்டில் பிடிக்கிறதுவரைக்கும் பிரச்சனைதான். இடம் வாங்கி ரிஜிஸ்தர் பண்றாங்களோ இல்லையோ. தயாரிப்பாளர் சங்கத்துல ஒரு டைட்டிலை ரிஜிஸ்தர் பண்ணிடுறாங்க. எந்த பெயரைச் சொன்னாலும் அது தயாரிப்பாளர் சங்கத்துல பதிவு செய்த பெயரா இருக்கு. சும்மா, நீ ஏண்டா என்னை கூப்பிட்ட அப்படின்னு கேட்டால் அந்தப் பெயரைகூட ரிஜிஸ்தர் பண்ணி வச்சிருக்காங்க. 
 
வேகமாக இந்தப் படத்தை எடுத்திருக்கீங்க போலிருக்கே?
 
வாழ்க்கையில் வேகமாக முன்னேறணும்னா மெதுவா அதற்கான வேலையை செய்யணும். அப்படி மெதுவாதான் இந்தக் கதையை உருவாக்கினோம். அதுக்குன்னு அவதார், ஜுராஸிக் வேர்ல்டுன்னு நினைக்க வேண்டாம். இயல்பான காமெடிக்கு முக்கியத்துவமான படம், அவ்வளவுதான்.
 
இயக்குனர்களைப் பற்றி...?
 
இந்தப் படத்தோட இயக்குனர்கள் முருகான்ந்த் தான் என்னோட பலம். இதுக்கு முன்னாடி பல படங்கள்ல நான் பேசுன நகைச்சுவைக்கும் அவங்கதான் காரணம். இந்தப் படத்துக்கும் பேசிப் பேசிதான் லைன் பிடிச்சோம். 
 
எப்படிப்பட்ட படம் இது?
 
ஒரு அழகான காதல், யதார்த்தமான நகைச்சுவை கலந்த படம். கடைசில ஒரு சின்ன மெசேஜ் இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான படமா உருவாக்கியிருக்கோம்.

ஹீரோவானபோது யாராவது அட்வைஸ் செய்தார்களா?
 
ஆர்யா சொன்னபடி உடம்பை குறைச்சிட்டேன். எப்படி ட்ரெஸ் போடணும்னு சிம்பு டிப்ஸ் தந்தார். 
 
உதயநிதியோட கெத்து படத்தில் நடிக்கலையே ஏன்?
 
வரிசையா அவர்கூட படம் பண்ணியாச்சு. ஒரு இடைவெளி இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சோம். கெத்துல எனக்கான கதாபாத்திரமும் இல்லை. அதனால் நடிக்கலை.
இனி காமெடி வேடங்களில் நடிக்க மாட்டீர்களா?
 
இனிமேல் காமெடியனாக நடிக்கப்போவதில்லை என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காமெடி காட்சிகளில் நமக்கு சுதந்திரம் தரும் ஹீரோக்களுடன் நடிக்கவே நான் விரும்புகிறேன். பெரிய ஹீரோவுடன் இணைந்து காமெடி செய்யும்போது ஹீரோவோட இமேஜை டேமேஜ் செய்யாம நம்மால நடிக்க முடியாது. அதனாலதான் என்னுடைய நண்பர்கள் லிஸ்டில் சிம்பு, ஆர்யா, உதயநிதி, ஜீவா எப்பவுமே முதல் இடத்துல இருக்காங்க. இவங்க என்னுடைய காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எனக்கு சுதந்திரம் தருவாங்க.
 
ஆக்ஷன் படங்களில் நடிப்பீர்களா?
 
அதுபற்றி சிந்திக்கலை. ஆக்ஷன் எனக்கு சரிவராது. எனக்கு காமெடிதான் வரும். அதனால் காமெடி நாயகனாகவே தொடர்வேன்.