செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Updated : வியாழன், 21 மே 2015 (09:09 IST)

யாழ் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

யாழ் நீதிமன்றத்துக்குள் பொதுமக்கள் ஆத்திரத்துடன் புக முயன்ற போது ஏற்பட்ட கலவரத்தை அடுத்து பொலிஸார் அங்கு கண்ணீர் புகை பிரயோகம் செய்திருக்கிறார்கள்.

நீதிமன்ற கட்டிடத்துக்கும், வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது.
 
புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரியும், அந்தப் வன்புணர்வு கோரக் கொலையைக் கண்டித்தும் வடபகுதியெங்கும் கடையடைப்பும் போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.
 
இரண்டாவது நாளாக யாழ் நகரில் முழுமையாகக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. வங்கிகள் முக்கிய அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை. நகரின் சில இடங்களில் வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன.
 
சுமார் பத்து வருடங்களின் பின்னர் முதற் தடவையாக அதுவும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், யாழ் நகரப் பகுதி முழுமையாக வெறிச்சோடியுள்ளது.
 
இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய வடபகுதி மாவட்டங்களிலும் நகர்ப்புறப் பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாமல் நெடுங்கேணி ஓமந்தை சிதம்பரபுரம் போன்ற கிராமப்பறப் பாடசாலை மாணவர்களும் மாணவி வித்யாவின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி பாடசாலைகளில் போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.
 
இந்தப் போராட்டங்களுக்கு அந்தந்த நகரங்களைச் சேர்ந்த வர்த்தகர் சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்து கடையடைப்பு மற்றும் பணி புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன.
 
இதேவேளை, மாணவி வித்யாவின் மரத்துடன் சம்பந்தப்பட்டவர் என கருதப்பட்டு தப்பியோடியதாககத் தெரிவிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரையும், அவருடன் சட்டத்தரணி ஒருவரையும் புதனன்று யாழ் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக காவல்துறையினர் புங்குடுதீவு மக்களுக்கு உறுதியளித்திருந்ததையடுத்து, அவர்கள் கொண்டு வரப்படுவதைப் பார்ப்பதற்காகவும், அவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்காகவும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் யாழ் மாவட்ட நீதிமன்றப் பகுதியில் கூடியிருந்தனர்.
 
அதனால், கலகம் அடக்கும் காவல்துறையினர் நீதிமன்ற பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நீதிமன்ற சூழலில் பரபரப்பும் ஒருவிதப் பதட்டமும் ஏற்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கிடையில் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு சந்தேக நபரையும் சட்டத்தரணியையும் நீதிமன்றத்திற்கக் கொண்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தபோதிலும், 12 மணி கடந்தும் அவர்கள் கொண்டு வரப்படாததையடுத்து, கூட்டம் ஆத்திரமுற்று நீதிமன்ற கட்டிடத்திற்குள் புக முயன்ற போது ஏற்பட்ட கலவரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், கூட்டத்தைக் கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.