செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 ஜூன் 2015 (06:49 IST)

இலங்கையில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி உதயம்

இலங்கையில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்று உதயமாகியுள்ளது.


தமிழ் முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியவை இணைந்து இந்தப் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

புதிய கூட்டணிக்கு மனோ கணேசன் தலைவராகவும், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துனைத் தலைவர்களாவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே வாழும் சுமார் 15 லட்சம் தமிழ் மக்களுக்கு போதிய அரசியல் அதிகாரம், பிரதிநிதித்துவம் மற்றும் தலைமைத்துவத்தை அளிப்பதே இந்தப் புதிய கூட்டணியின் நோக்கம் என மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

எப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு-கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறதோ, அவ்வகையில் மலையகம் மற்றும் கொழும்பு உட்பட பல மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் கூறுகிறார்.

இருந்தாலும் மலையகப் பகுதியில் முக்கியமான ஒரு அரசியல் கட்சியாக பார்க்கப்படும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் தமக்கு எந்த உறவும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமது கூட்டணியின் நிலைப்பாடு குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.