வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2015 (06:17 IST)

இந்தியப் பிரஜையை விடுவித்து யாழ் நீதிமன்றம் உத்தரவு

யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 130 பேரில், ஒருவராகிய இந்தியப் பிரஜையான அபிலாஸ் நீலகண்டன் என்பவரை யாழ் நீதிமன்றம் திங்களன்று விடுதலை செய்திருக்கின்றது.

தந்தை வழி ஊராகிய யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதற்காக இலங்கை வந்திருந்த பெங்களுரைச் சேர்ந்த அபிலாஸ் நீலகண்டன் என்ற இளைஞன் யாழ் நகரில் தனது தந்தையாருடைய வீட்டில் இருந்த வேளை வெளியே வீதியில் ஏதோ சத்தம் கேட்டதையடுத்து அது என்ன என்று பார்ப்பதற்காக வந்தபோது காவல் துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவர் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்படாதவர் என்றும் அவர் ஓர் இந்தியப் பிரஜை என்றும் காவல்துறையினருக்கும் ஏனைய தரப்பினருக்கும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் எடுத்துரைத்து அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அபிலாஸ் நாளை சிறையதிகாரிகளினால் விடுதலை செய்யப்படுவார் என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒரு தொகுதியினராகிய 34 பேர் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு நிபந்தனையுடன் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் நீதிமன்றத் தாக்குதல் சநதேக நபர்களில் இன்னும் 90 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.