காணி உரிமை தொடர்பில் கிழக்கிலங்கையில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே சர்ச்சை

காணி உரிமை தொடர்பில் கிழக்கிலங்கையில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே சர்ச்சை
Last Modified வெள்ளி, 5 ஜூன் 2015 (05:59 IST)
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள மிறாவோடைப் பகுதித் தமிழர்கள் தமது காணிகளை முஸ்லிம்கள் அத்துமீறி அபகரிப்பதாக தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தக் கோரி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் ஆர்பாட்டம் செய்தனர்.மிறாவோடையில் போருக்கு பின்னர் மீளக்குடியேறிய தமிழர்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்ட காணிகளே முஸ்லிம்களினால் அத்துமீறி எல்லைகளை அமைத்து அபகரிக்கப்படுவதாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிக்குள் 118 வருடங்கள் பழமை வாய்ந்த தமது உறுதிக்காணிகளும் இருப்பதாக முஸ்லிம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச செயலக அதிகாரிகள் கவனக்குறைவால் காணி உரிமைகளை மாற்றிக் கொடுத்திருக்கக் கூடும் என முஸ்லிம் தரப்பினர் கூறுகின்றனர்.

வாழைச்சேனை மற்றும் ஒட்டமாவடி பிரதேசங்களின் எல்லையில் எழுந்துள்ள இந்த பிரச்சினை காரணமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் அந்தப் பகுதியில் அவ்வப்போது முறுகல் நிலையும் காணப்படுகின்றது.

அதிகாரிகளுடன் சந்திப்பு

காணி உரிமை தொடர்பான தங்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கோரி ஏற்கனவே பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டங்களை நடத்தியுள்ள போதிலும் தங்களுக்கு தீர்வு கிடைப்பதாக இல்லை என தமிழர் தரப்பு கூறுகின்றது.

வியாழக்கிழமை மட்டக்களப்பு நகர் பஸ் நிலையம் முன்பாக ஒன்று கூடி இவர்கள் மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட செயலகம் முன்பாகவும் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த அரசாங்க அதிபர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து உரையாடினார்

காணி சம்மந்தமான வழக்குகள் நீதிமன்றில் இருக்கும் நிலையில் வழக்கு விசாரனை முடியும் வரை எவரும் உள்ளே நுழையாதவாறு அந்த பகுதியில் பொலிஸ் காவல் கடமையில் ஈடுபடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபரால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளையடுத்து ஆர்பாட்டகாரர்கள் கலந்து சென்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :