1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : திங்கள், 21 ஏப்ரல் 2014 (12:08 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அணிகள் - ஐசிசி மீது இயன் சாப்பல் கடும் தாக்கு!

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அசோசியேட் அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழையும் புதிய திட்டத்தை ஐசிசி வகுத்திருப்பது வாக்கு அரசியலே தவிர டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்ப்பதாக அது அமையாது என்று இயன் சாப்பல் கடுமையாக சாடியுள்ளார்.
 
இது குறித்து அவர் எழுதியுள்ள பத்தி ஒன்றில் கூறியிர்ப்பதாவது:
 
முதலில் ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அணி, டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்படும் விதம் ஆகியவற்றை முன்னேற்றும் வழியை ஐசிசி பார்க்கவேண்டும், புதிய அணியை இந்த நிலையில் கொண்டு வருவது அதன் வேலையாக இருக்க முடியாது.
 
மேலும் புதிய அணி சேர்க்கை என்ற இந்த அலங்காரப் பேச்சு, மற்றும் திட்டம் ஏற்கனவே இருக்கும் அணிகளில் எதுவும் தகுதி இழக்கச் செய்யப்படமாட்டாது என்பதை தெளிவாக பறை சாற்றுகிறது. 
 
அயர்லாந்தோ, ஆப்கானிஸ்தானோ ஜிம்பாவே அல்லது, வங்கதேசம் அல்லது (கடவுள் மன்னிப்பாராக) வெஸ்ட் இண்டீஸ் அணியையோ தோற்கடித்து விட்டால் உடனே அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தகுதி பெற்று விட்டார்கள் என்பதாகிவிடாது.
 
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டி அளவில் சமனமின்மையே நிலவுகிறது. 'பலமான' கிரிக்கெட் அணிகள் என்று ஆஸ்ட்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை இவர்களே அறுதியிடுகின்றனர்.
ஆனால் இதுவே 'பலமான' அணிகள் என்று கூறுவதற்கில்லை. இந்திய அணி அயல்நாட்டில் எந்த ஒரு முக்கியமான டெஸ்ட் போட்டியையோ, தொடரையோ வெல்வதில்லை. இங்கிலாந்து அணி தீவிரம் குறைந்த ஒரு மிதவாத அணியாக மாறிவிட்டது. ஆஸ்ட்ரேலியாவில் முன்னேற்றம் இருக்கிறது ஆனால் சில மாதங்களுக்கு முன்பு கூட 4- 0, 3- 0 என்று அயல்நாட்டில் உதை வாங்கியது. தென் ஆப்பிரிக்காவும் ஜாக் காலிஸ், பலமான தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோருக்குப் பிறகு எப்படி கட்டமைக்கப்படும் என்று தெரியாது.
 
இலங்கை இதற்கு வெளியே உள்ளது. அவர்களால் உண்மையான வேகப்பந்து வீச்சாளர்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. சங்கக்காரா, ஜெயவர்தனே ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் தொடர்ந்து திறமையான கிரிக்கெட் வீரர்களை கொண்டு வருகிறது. ஆனால் சொந்தநாட்டில் விளையாட முடியாமல் போவதால் அவர்களாலும் தொடர்ந்து திறன்களை வெளிக்கொண்ர முடிவதில்லை. இதனால் சீராக அந்த அணி சீரற்ற முறையில் விளையாடி வருகிறது.
 
நியூசீலாந்தோ தைரியமான பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் புத்துயிர் பெற்றாலும், ஓரளவுக்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருந்தாலும் அதிக அளவில் வீரர்கள் பெஞ்சில் இல்லை.
 
வங்கதேசம், ஜிம்பாவே ஆகிய அணிகள் இங்கு இருப்பது வாக்களிப்பதன் பயனாகவே தவிர உண்மையான தரநிலை அடிப்படையில் அல்ல.
 
இந்த நிலையில் புதிய அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து எப்படி சரியாகும். அவர்களால் தொடர்ந்து டெஸ்ட் தரத்திற்கு திறமைகளை வளர்த்தெடுக்க முடியுமா, அதற்கான உள்கட்டமைப்புகள் உள்ளதா?
 
ஏற்கனவே 2 அணிகள் இருக்கக்கூடாது அது இருந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் அணிகளுக்க்கு சீரியசான உதவி தேவைப்படுகிறது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அணியைக் கொண்டுவருவது சரியல்ல என்று கருதவேண்டியிருக்கிறது.
 
இவ்வாறு எழுதியுள்ளார் இயன் சாப்பல்.