விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடும் ஷுப்மன் கில்.. திறமையை நிரூபித்தால் மீண்டும் இந்திய அணியில் இடம்?
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக பஞ்சாப் அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தனது ஃபார்மை மீட்டெடுக்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஜனவரி 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் சிக்கிம் மற்றும் கோவா அணிகளுக்கு எதிராக கில் களமிறங்குகிறார்.
அதன் பிறகு, ஜனவரி 11-ல் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார். இத்தொடர் முடிந்த கையோடு, ஜனவரி இறுதியில் பஞ்சாப் அணிக்காக சவுராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிற்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
டி20 அணியில் இடம் கிடைக்காத நிலையில், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தி தனது பேட்டிங் திறனை மெருகேற்ற கில் திட்டமிட்டுள்ளார்.
Edited by Siva