தோல்வியே காணாத பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்.. 16 பந்தில் 43 ரன்கள் அடித்த வைபவ்..!
ஐபிஎல் 2026 சீசனில் தோல்வியே காணாத பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி பயணத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், 223 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி நிர்ணயித்த 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ரன்கள் அடித்தும், ஜெய்ஸ்வால் 51 ரன்கள் அடித்தும் அதிரடி அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
நடுவரிசையில் சஹால் மற்றும் ப்ரார் ஆகியோரின் பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிந்தாலும், இறுதியில் டோனோவன் ஃபெரைரா மற்றும் இம்பாக்ட் பிளேயர் சுபம் துபே இணை அதிரடியில் மிரட்டியது. ஃபெரைரா 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும், துபே 12 பந்துகளில் 31 ரன்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாகப் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி நேரத்தில் ருத்ரதாண்டவம் ஆடி வெறும் 22 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் 222 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி மிரட்டினாலும், கடைசி ஓவர்களில் ரன்கள் கசிந்தன.
இருப்பினும், பேட்டிங்கில் காட்டிய முதிர்ச்சியால் ராஜஸ்தான் இந்த சீசனில் பஞ்சாப்பை வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Edited by Siva