1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 5 ஜூலை 2014 (19:40 IST)

முதுகெலும்பு முறிந்த நெய்மார்: அதிர்ச்சிக்குள்ளான பிரேசில்

பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார் காயமடைந்து இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி பிரேசிலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவுக்கு எதிராக இன்று அதிகாலை நடைபெற்ற பரபரப்பான காலிறுதியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் ஜெர்மனியை சந்திக்கிறது.
 
ஆனால் ஜெர்மனிக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில், கோப்பை வெல்லும் கனவுடன் ஆடி வரும் பிரேசில் அணிக்கு அடிமேல் அடி விழுந்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் போட்டியின்போது கீழே தள்ளிவிடப்பட படுகாயம் அடைந்து ஸ்ட்ரெக்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். இவர் இனி இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சியோடு, கொலம்பியாவுக்கு எதிராக முதல் கோலை அடித்த பிரேசில் கேப்டன் தியாகோ சில்வா மஞ்சள் அட்டை வாங்கி அடுத்த போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
கொலம்பியாவுக்கு எதிரான மிகவும் நெருக்கடியான ஆட்டத்தின் இறுதித் தருணங்களில் நெய்மார், கொலம்பிய வீரர் யுவான் கேமிலோ சுனைகாவுடன் மோதிக் கொண்டார். இதில் நெய்மார் கீழே விழ, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இவர் இவ்வாறு காயமடைந்ததற்கு ஆட்ட நடுவர்களின் தாராள மனப்போக்குதான் காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஸ்பானிய நடுவர் கார்பெலோ கொலம்பியா, பிரேசில் வீரர்கள் இருவரும் செய்த ஆக்ரோஷமான ஆள் தாக்குதல் ஆட்டத்தைக் கண்டு கொள்ளாமல் சுதந்திரமாக விட்டது கடைசியில் நெய்மார் காயத்தில் வந்து முடிந்துள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பயிற்சியாளர் ஸ்கொலாரி, தான் எப்போதும் இதனைக் கூறி வந்ததாகத் தெரிவித்துள்ளார். எதிரணியினர் நெய்மாரைக் குறி வைத்துத் தாக்குகின்றனர் என்று நான் கூறி வந்தது கவனிக்கப்படவில்லை என்றார்.
 
காயம் ஏற்படுத்திய கொலம்பிய வீரர் சுனைகா கூறுகையில், “நான் எந்த வீரரையும் காயப்படுத்த வேண்டும் என்று ஆடுவதில்லை. ஆனால் நான் களத்தில் இருக்கும்போது நான் எனது அணிக்காக ஆட வேண்டும், நான் அணிந்த சீருடைக்கு நன்றிக்கடன் பட்டவனாக ஆட வேண்டும். யாரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை” என்று கூறியுள்ளார்.
 
ஜெர்மனி அணி 4வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்குள் தொடர்ச்சியாக நுழைந்து சாதனை படைத்துள்ளது. நெய்மாரின் சவாலை அரையிறுதியில் சந்திக்க வேண்டியிருக்காது என்று அந்த அணி ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், இது பிரேசிலின் ஆக்ரோஷ ஆட்டத்தை அதிகரிக்கவே செய்யும், அந்த அணி நெய்மாருக்காகவே இந்த உலகக் கோப்பையை வெல்ல இன்னும் கடுமையாக முயற்சி செய்யும். ஆகவே ஜெர்மனிக்கு எதுவும் சுலபமில்லை என்று தெரிகிறது.