வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (13:29 IST)

விஸ்வரூபத்துக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் சங்கம் : மல்லுக் கட்டும் முக்கிய புள்ளிகள்

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மரணத்தை தொடர்ந்து புதிய தலைவர் யார் என்ற போட்டி இந்திய கிரிக்கெட் சங்கத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் சங்கத்தில் பரபரப்பான நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. ஐபில் போட்டிகளால் உருவான சூதாட்ட புகார்கள், தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்ட ஸ்ரீனிவாசன், சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடை, புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் டால்மியாவின் சமீபத்திய மரணம் என்று அடுத்தடுத்து பரபப்பாகவே நகர்கிறது இந்திய கிரிக்கெட் சங்க நடவடிக்கைகள்.

இந்நிலையில் டால்மியா மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதே மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மிகவும் பலமிக்க, செல்வாக்கு மிக்க, இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் முக்கிய கிரிக்கெட் புள்ளிகளுக்குள் பலத்த போட்டி நிலவுகின்றது. கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் கவுதம்ராய், கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, முன்னாள் தலைவர் சரத்பவார்  உள்பட பலர் இதற்கான போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.சி.சி. சேர்மனும், முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவருமான என்.ஸ்ரீனிவாசன் இதில் நேரடியாக போட்டியில் இல்லாவிட்டாலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இவருக்கு 13 மாநில சங்கங்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனது ஆதரவாளர் ஒருவரை அவர் தலைவர் பதவிக்கு நிறுத்த வய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தலைவர் போட்டியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், கிரிக்கெட் வாரிய செயலாளருமான அனுராக் தாக்கூர் பலம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். அவருக்கு திரிபுரா மாநில சங்கம் ஆதரவு அளித்துள்ளது.

தற்போது இடைக்காலத் தலைவராக கிழக்கு மண்டல துணைத் தலைவராக இருக்கும் கவுதம்ராய்க்கு வாய்ப்பு இருப்பதாக் கூறப்படுகிறது. அவரை அந்த மண்டலத்தில் உள்ள ஒரு மாநில சங்கம் பரிந்துரை செய்தால் அவர் இடைக்கால தலைவராக முடியும்.

தலைவர் பதவிக்கு முக்கிய புள்ளிகள் ஆதரவு திரட்டுவதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களின் திடீர் விஸ்வரூபம் கிரிக்கெட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.