"சபாஷ்! ஹிட்லர் வாழ்க!": ஜெர்மனியின் வெற்றிக்கு மலேசிய எம்.பி.யின் ட்வீட்டர் கருத்தால் சர்ச்சை

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: புதன், 9 ஜூலை 2014 (17:43 IST)
உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், "சபாஷ்! ஹிட்லர் வாழ்க!" என்று மலேசிய அமைச்சர் ஒருவர் ட்விட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமது நாட்டு அணி தோல்வியுற்றதால் பிரேசில் ரசிகர்கள் சோகத்திலும், தமது நாட்டு அணி அபார வெற்றி பெற்றதால் ஜெர்மனி நாட்டினர் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருந்த வேளையில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பங் என்பவர் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

ஜெர்மனியின் வெற்றியை பாராட்டும் விதமாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் நன்று... சபாஷ்! ஹிட்லர் நீடூழி வாழ்க!" என்று கூறியிருந்தார்.
மலேசிய எம்.பி.யின் இந்தக் கருத்துக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது கருத்து முட்டாள்தனமானது என்றும், மக்களின் உணர்ச்சிகளை கேலி செய்யும் விதமாக உள்ளது என்றும் ட்விட்டரிலேயே பலர் தாக்குதல் தொடுத்தனர்.

அதேவேளையில், இந்த சர்ச்சை குறித்து ஸ்டார் ஆன்லைனுக்கு பங் அளித்த பேட்டியில், "மக்களுக்கு தற்போது என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை. ஹிட்லர் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு மனிதர். நேற்று ஜெர்மனியின் ஆட்டம், ஹிட்லரின் தோரணையில் இருந்தது. அதனால்தான் நான் அப்படி கூறினேன்" என்றார்.
இந்தக் கருத்தை பங், ஜெர்மனியில் மட்டும் கூறியிருந்தால், இந்நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்று மலேசியாவின் பெனாங் மாநில முதல்வர் லிம் குவான் யங் கூறியுள்ளார்.

மேலும், ஆளும் கட்சி உறுப்பினராக உள்ள பங்-கை, மலேசிய பிரதமர் நஜீப் ராசக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதில் மேலும் படிக்கவும் :