கோல்டன் டக் அவுட் ஆன ரோஹித் சர்மா.. 77 ரன்கள் குவித்து அசத்திய விராத் கோலி.. ஒரே நாளில் நடந்த சம்பவம்..!
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை போட்டியில், டெல்லி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 77 ரன்கள் குவித்து அசத்தினார். ஆந்திராவுக்கு எதிரான முந்தைய போட்டியில் சதம் அடித்திருந்த கோலி, இப்போட்டியிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழக்க, களம் புகுந்த கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இறுதியில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 77 ரன்கள் எடுத்திருந்தபோது சி.டி.கஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம், மும்பை அணிக்காக விளையாடி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஒரு கசப்பான நாளாக அமைந்தது. சிக்கிம் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 155 ரன்கள் குவித்து விளாசிய ரோஹித், உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 'கோல்டன் டக்' அதாவது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
தேவேந்திர சிங் போரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே புல் ஷாட் ஆட முயன்று ஃபைன் லெக் திசையில் இருந்த ஜெக்மோகன் நாகர்கோட்டியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Edited by Siva