பாகிஸ்தானிடம் இவ்வளவு கேவலமாகவா தோற்பது? யு-19 வீரர்களிடம் விசாரணை நடத்த முடிவு?
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அடைந்த படுதோல்வி குறித்து விரிவான ஆய்வு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே போன்ற ஐபிஎல் நட்சத்திரங்கள் இருந்தும், இறுதிப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் குவிக்க, இந்திய அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த மோசமான செயல்பாட்டை தொடர்ந்து நடைபெற்ற பிசிசிஐ உயர்மட்ட கூட்டத்தில், வழக்கமான அறிக்கைகளை தாண்டி தலைமைப் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனிட்கர் மற்றும் கேப்டன் மாத்ரே ஆகியோரிடம் நேரடி விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒழுங்குமுறை சிக்கல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள யு-19 உலக கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், இந்த ஆய்வு அணியின் பலவீனங்களை கண்டறிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva