வைபவ் சூர்யவன்ஷி இந்திய சீனியர் அணியில் இடம்பெறாதது ஏன்? இந்த 2 காரணங்கள் தான்..!
ஹராரே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், 14 வயது வைபவ் சூர்யவன்ஷி ஆடிய 175 ரன்கள் (80 பந்துகள்) ஆட்டம் கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது.
15 சிக்ஸர்களுடன் அவர் நிகழ்த்திய இந்த சாதனை, அவரை ஏன் இன்னும் சீனியர் இந்திய அணியில் சேர்க்கவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு ஐசிசியின்
வயது வரம்பு விதிமுறையே முக்கிய காரணம்.
2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐசிசி விதியின்படி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வீரருக்கு குறைந்தது 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். மார்ச் 27, 2011-ல் பிறந்த வைபவ்வுக்கு தற்போது 14 வயதே ஆகிறது. இதனால் மார்ச் 27, 2026 வரை அவர் காத்திருக்க வேண்டும். அதேபோல், பிசிசிஐ-யின் ஒருமுறை மட்டுமே உலகக்கோப்பை விளையாடும் விதியால், அவர் மீண்டும் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும் ஆட முடியாது.
ஐபிஎல்-லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிவேக சதம் விளாசி சாதனை படைத்த இந்த பீகார் இளம் புயல், 15 வயதை எட்டியவுடன் இந்திய சீனியர் அணியில் நீல நிற ஜெர்சியுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva